சீமான் வீட்டு பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விவகாரம்.. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு..!
சீமான் வீட்டில் பாதுகாவலர், உதவியாளரை சட்ட விரோதமாக காவல்துறை அழைத்து சென்றது தொடர்பாக விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பட்டு அந்த சம்மன் நேற்று அவரது வீட்டில் ஒட்டப்பட்டது. இந்த சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் விட்டு பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், என் செந்தில்குமார் அமர்வில் வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் ஆஜராகி, அவசர முறையீடு செய்தார். அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் கொடுக்க சென்ற இடத்தில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்தது உண்மையா? - முதல் முறையாக உண்மையை பேசிய சீமான்...!
சட்ட விரோதமாக 2 பேரை அழைத்துச் சென்றுள்ளதால் இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய இருப்பதால் அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். முறையீட்டை கேட்ட நீதிபதிகள், போலீசார் கைது செய்தால், 24 மணி நேரத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள் என்றும் அதன் பின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்திய நீதிபதிகள் இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நான் ஓடி ஒளியவில்லை, தலைமறைவாகவில்லை... இன்று மாலை ஆஜராவேன்.. சீமான் ஆவேசம்...!