இறுகுகிறது அமலாக்கத்துறை பிடி.. முடிந்தது 2 ஆண்டு தலைமறைவு.. செந்தில் பாலாஜி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்..!
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், 2 வருடமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், தற்போதைய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிம்ட பணம் பெற்று 1.62 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும் இந்த மோசடியில் அவரது சகோதரர் அசோக்குமார், (வயது 42) மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் கார்த்திகேயன், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட பல பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கின் தொடர் விசாரணையில் மோசடி தொகையில் 1.34 கோடி ரூபாய் செந்தில்பாலாஜி வங்கி கணக்கிலும், 29.55 லட்சம் ரூபாய் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டது அம்பலமானது. அதேபோல 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில் 10.88 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதும் தெரிந்தது.
இதையும் படிங்க: 'பதவி நீக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை..!' உச்சநீதிமன்றத்தையே மிரள வைத்த செந்தில் பாலாஜி
இதற்கு அசோக்குமார் மனைவி, மாமியார் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டு சிறை வாசத்திற்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் இருந்தாலும், அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவானார். கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில், அவர் ஆஜர் ஆகாமல் வெளிநாட்டிற்கு தப்பிவிடும் வாய்ப்பு இருந்ததால், நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அசோக்குமார் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.இதற்கிடையே, இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உடகபட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக்கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் வரும் ஏப்ரல் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜனவரி மாதம் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தமது வக்கீலுடன் ஆஜரானார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது தலைமறைவான அசோக் குமார், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்டுக்கு பிறகு மாதம்தோறும் மின்கட்டணம்..! தமிழக அரசு ஆலோசனை..!