உச்சநீதிமன்றம் கெடு... மனமில்லாத திமுக..! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் செந்தில் பாலாஜி..?
திமுக அரசு செந்தில் பாலாஜியை நீக்கும் நிலையை சந்திக்க தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி அவராகவே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் பதவியா? ஜாமீனா? இரண்டில் ஒன்றை முடிவு செய்யுங்கள் என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்ததை அடுத்து, செந்தில் பாலாஜி திங்கள்கிழமை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையால் திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 2023 ஜூனில் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அப்போது அமைச்சராக இல்லை என்பதால், சாட்சிகளை கலைக்க மாட்டார் என்ற உத்தரவாதத்தை ஏற்று, செப்டம்பட் 26ம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால், அடுத்த நாளே அவர் அமைச்சராக பதவியேற்றார்.
அதை எதிர்த்து, வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். நீதிபதி அபயா எஸ் ஓகா தலைமையிலான அமர்வு மனுவை விசாரித்தது. முந்தைய விசாரணையில், 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? அல்லது அவருக்கு எதிரான இந்த வழக்கை நாங்கள் விரைவாக விசாரிக்கட்டுமா?' என்று நீதிபதிகள் கேட்டிருந்தனர். அதற்கு செந்தில் பாலாஜி, 'நான் அமைச்சராக தொடரக்கூடாது என, உச்சநீதிமன்றம் கூறவில்லை. நிபந்தனை விதித்தால், பின்பற்ற தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.10 வசூல் இப்போ மட்டும்தான் நடக்குதா..? புள்ளி விவரங்களோடு புலம்பிய செந்தில் பாலாஜி..!
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ''ஏற்கனவே மூன்று முறை உங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பு வழங்கினோம். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உங்களது கடந்த கால செயல்பாடுகள், நீங்கள் இந்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டதை நிரூபிக்கின்றன. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கேட்கிறீர்கள். அது சாத்தியம் இல்லை. ஏனென்றால், ஆயிரக்கணக்கான சாட்சிகள் உள்ளனர். உங்களுக்கு ஜாமின் வழங்கியது, சிறையில் நீங்கள் காட்டிய நன்னடத்தையால் அல்ல. அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்ற காரணம்தான். ஆனால், எங்கள் தாராளத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்'' என்றனர்.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், 'அமைச்சராக பதவி ஏற்க மாட்டேன் என, செந்தில் பாலாஜி சொல்லவே இல்லை' எனக் கூறினார். இதனால் கோபமான நீதிபதிகள், 'அப்படி என்றால், உங்களுக்கு ஜாமினே வழங்கி இருக்கக்கூடாது. அது நாங்கள் செய்த தவறுதான். நீங்கள் அமைச்சராக இருந்தபோது, புகார்தாரர்களுடன் உடன்பாடு செய்து கொண்டதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது. சாட்சிகளை கலைக்க முயன்றதையும் சுட்டிக் காட்டியது. அதையெல்லாம் மீறி ஜாமின் தந்தது எங்கள் தவறு தான்' என்று கடுமை காட்டினர்.
'சாட்சி அளிக்க எவரும் வரவில்லை என்றால், அமைச்சர் என்ன செய்வார்?' என அவரது தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் மீண்டும் கேட்டார். இதனால், கடுப்பான நீதிபதிகள், 'எந்த சாட்சியும் கூண்டுக்கு வர முடியாமல் அமைச்சர் தடுக்கிறார் என்பது தான் அர்த்தம்' என்று கோபப்பட்டனர். 'பண மோசடி வழக்கில் ஜாமின் கிடைப்பது மிகவும் கடினம். அதையும் மீறி ஜாமின் வழங்கியது தவறு என்பதை இப்போது உணர்கிறோம். உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமீன் வேண்டுமா என்பதை, 28ம் தேதிக்குள் சொல்லுங்கள்' என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கிடைப்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்த திமுக அரசு செந்தில் பாலாஜியை நீக்கும் நிலையை சந்திக்க தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி அவராகவே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. தேவைப்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன் அவர் அமைச்சராக்கலாம் என திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பதவியில் இருந்து வரும் திங்கட்கிழமை ராஜினாமா செய்ய உள்ளதாக திமுக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் செம்ம குஷி.. சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!