மந்தமான பொருளாதாரம்! வேலையில்லை, அதிகரிக்கும் பணவீக்கம்: மத்திய அரசை வறுத்தெடுத்த ப.சிதம்பரம்
70 சதவீதம் பேர் அடித்தட்டு நிலையில் வாழ்ந்து தினசரி 100 முதல் 150 ரூபாய் ஊதியத்துக்கு வேலைபார்க்கிறார்கள்.
நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது, இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது, 5 ஆண்டுகளாக ஊதியம் உயரவில்லை என்று முன்னாள் நிதிஅமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசை வெளுத்து வாங்கினார்.பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் எங்கே செல்கிறது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.“2025ம் ஆண்டில் நாட்டின் உண்மையான பொருளாதார நிலை” என்ற தலைப்பில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராஜீவ் கவுடா அவரின் குழுவினர் தயார் செய்த அறிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று கட்சியின் புதிய அலுவலகத்தில் வெளியி்ட்டார்.
டெல்லியில் உள்ள 24 அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு இன்று அளித்த பேட்டியில், ''நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. பொருளாதாரம் மந்தநிலையில்தான் இருக்கிறது என மத்திய அரசு தெரிவிக்க முயற்சிக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் வரை குறையக்கூடும்.புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இளைஞர்களின் வேலையின்மை 40சதவீதத்தை எட்டிவிட்டது. புதிதாக வேலை உருவாக்கப்படவில்லை, ஆனால் அவ்வப்போது பிரதமர் மோடி வேலை நியமன கடிதங்களை இளைஞர்களுக்கு வழங்குகிறார். காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது புதிய வேலைவாய்ப்பு அல்ல, வேலையை உருவாக்குவது என்று அர்த்தம் அல்ல.
இதையும் படிங்க: இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு...
அரசு, தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக உயராமல் தேக்கமைடந்திருக்கிறது. பணவீக்கம் கொதிப்பான நிலையில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக உணவு, கல்வி, உடல்நலத்துக்காக செலவிடுவதில் பணவீக்கம் அதிகரித்து மக்கள் அதிகமான தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது, இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் மாறிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பணவீக்கம் உயர்ந்த நிலையில்தான் இருக்கிறது, ஆனால், மத்திய அரசு குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அது மட்டுமல்லாமல் வருமானத்திலும் மிகப்பெரிய இடைவெளி, சமத்துவமின்மை இருக்கிறது. நாட்டில் உள்ள உயர்நிலையில் இருக்கும் 20 முதல் 30 சதவீதம் பேர், சிறந்த நிலையில் இருக்கிறார்கள், மீதமுள்ள 70 சதவீதம் பேர் அடித்தட்டு நிலையில் வாழ்ந்து தினசரி 100 முதல் 150 ரூபாய் ஊதியத்துக்கு வேலைபார்க்கிறார்கள். நாட்டில் ஏழைகளுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்துவிட்டது, பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. இதை சரிசெய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏராளமான உண்மைகளை இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது, ஆனால், இதை மத்திய அரசு தங்களுக்கு ஏற்றவாறு தேவையானதை வெளியிட்டு மற்றவற்றை மூடிமறைத்தது.
பொருளாதாரத்தின் உண்மையற்ற நிலையை மத்திய அரசு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் முன்வைக்கும் அதே வேளையில், பொருளாதாரத்தின் உண்மையான நிலை குறித்த அறிக்கையை முன்வைக்க பேராசிரியர் ராஜீவ் கவுடாவின் குழு முடிவு செய்தது” என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.12 லட்சம் கோடி காலி! பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள் என்ன?