375 ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைகிறது.. சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு..!
தமிழகத்தில் 375 ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் என்றும் சென்னை தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 17 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14 ஆம் தேதி அன்று தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று 4வது நாளாக விவாதம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து கேட்ட கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசினார்.
இந்த ஆண்டு தமிழகத்தில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது என்றும் இதற்காக குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும் என்றும் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, வேளச்சேரி எம்எல்ஏ ஹஸன் மௌலானா அமைச்சர் கே என் நேருவிடம் கேள்விகளை முன் வைத்தார். சென்னை தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை காரணமாக அடிக்கடி போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், திருத்துறைப்பூண்டி முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகப்பிரசிங்கித் தனம்... வேல்முருகன் மீது ஆத்திரத்தில் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..!