டாடா நிறுவனமா இப்படி செய்தது..? கேள்வி எழுப்பிய நீதிபதிகள்..!
மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்க உள்ள காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரங்களை கொண்டு செல்வதற்கு கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கி மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் சார்பில் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 198 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கரூர் மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு 17.75 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பெரிய அளவில் அறியப்படாத பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட டாடா நிறுவனம், ஆட்சேபம் ஏதும் இல்லை எனக் கூறி மத்திய மின்சார ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றது.
இதையும் படிங்க: E.D-க்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. விசாரிக்க மாட்டோம் என விலகிய நீதிபதிகள்..!
இதன் தொடர்ச்சியாக விவசாய நிலங்களில் மின் கம்பிகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்ட போது நில உரிமையாளர்ள் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் டாடா நிறுவனத்துக்கு மின் கம்பிகள் அமைக்க அனுமதியளித்து மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேசமயம், பிரபலமான பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, பொதுமக்களின் ஆட்சேபங்களைப் பெற்று, அவற்றை பரிசீலித்து புதிதாக உரிமம் வழங்க உத்தரவிட்டுள்ளார். புதிய உரிமம் பெறும் வரை, மின் கம்பிகள் பொருத்துவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 39 தூண்களை பாதுகாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நம்பகத்தன்மைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் பெயர்போன நிறுவனம் டாடா. அந்த குழுமத்தில் இருந்து வெளியாகும் பொருட்கள் எல்லாம் தரத்துடன் இருக்கும் என்பதே இந்தியர்களின் நிலைப்பாடு. அதேபோன்று சட்டவிதிகளை மீறாமல் செயல்படும் என்பதும் டாடா குறித்த பிம்பம். அப்படிப்பட்ட நிறுவனமே, இவ்வாறு கண்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: ஜாமீன் கிடைச்சும் வெளிவர லேட்டானா அது மனித உரிமை மீறல்.. கொந்தளித்த சென்னை உயர்நீதிமன்றம்..!