கெஜ்ரிவால் எழுச்சியும் வீழ்ச்சியும்... ஊழல் எதிர்ப்பு போராளி வீழ்ந்த கதை
ஊழலை எதிர்த்து களம் கண்டு எளிமையான முதல்வர் என பெயரெடுத்த கேஜ்ரிவால் வீழ்த்தப்பட்டுள்ளார். டெல்லி தேர்தல் அதை உறுதிப்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக களம் கண்ட கெஜ்ரிவால் அதே ஊழலில், ஆடம்பர வாழ்க்கையில் சிக்கி ஆட்சியையும் இழந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஊழல் புகார்கள் தலை எடுக்க ஆரம்பித்தது. இதில் காங்கிரஸ் கட்சி 2 ஜி ஊழலில் சிக்கி கடும் விமர்சனத்துக்குள்ளானது. காங்கிரஸுக்கு எதிராக பாஜக ஊழலை முன் வைத்து அரசியல் செய்ய, அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பும் சேர்ந்து காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கல் உருவானது.
இந்த நேரத்தில் தான் அன்னா ஹசாரேவின் சிஷ்யன் கெஜ்ரிவால் தலையெடுத்தார். ஐ.ஆர்.எஸ் அதிகாரி, நேர்மையின் உருவம், எளிமை, ஊழலுக்கு எதிரானவர், இளைஞர் என்கிற பன்முகத்தன்மையுடன் கேஜ்ரிவாலும், அவரது தோழர்களும் களம் கண்டனர். இது டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார் கெஜ்ரிவால்.
இதையும் படிங்க: துடைப்பத்தை எட்டு எட்டாய் வெட்டி எறிந்த கை… அரவிந்த் கெஜ்ரிவாலை காவு வாங்கிய காங்கிரஸ்..!
2013 டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலின் தலைமையில் இளம் தலைமுறையினர் களம் கண்டனர். காங்கிரஸின் மீதான கோபத்திலிருந்த மத்தியதர மக்கள், சிறுபான்மை மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றனர். 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் முதல்வராக நீடித்த செல்வாக்குமிக்க ஷீலா தீட்சித்தை நியூ டெல்லி சட்டமன்ற தொகுதியில் நேரடியாக எதிர்த்து தோற்கடித்தார் கெஜ்ரிவால்
யார் இந்த ஐ.ஆர்.எஸ் ஆஃபிசர் என இந்தியாவே திரும்பி பார்த்தது. டெல்லி முதல்வராகப் பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றா விட்டால் பதவி விலகுவேன் என்றார். அதன்படி நிறைவேற்ற முடியாததால் அடுத்த ஆண்டே பதவி விலகினார். ஏற்கெனவே தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை தொடங்கி பெருமளவு மக்கள் ஆதரவை பெற்றவர் கெஜ்ரிவால். இதற்காக இவருக்கு 2006ஆம் ஆண்டிற்கான ரமன் மகசசே பரிசு வழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட்ட கேஜ்ரிவால் தோல்வியடைந்தார். 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி இவர் தலைமையில் போட்டியிட்டு யாருமே எதிர்பாராத அளவு 67 தொகுதிகளை கைப்பற்றினார் கேஜ்ரிவால். அதுமுதல் அவரது தலைமையின் கீழ் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், ஆதிஷா உள்ளிட்ட பல இளம் அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
டெல்லியை மாற்றுவதிலும், இலவச கல்வி மாடல் பள்ளி என பல விஷயங்கள் கேஜ்ரிவால் சாதனையாக அமைந்தது. தான் எளிமையாக நடந்துக்கொள்வேன், லஞ்ச ஊழலுக்கு எதிராக வந்த நான் ஆட்சியில் லஞ்சம் என்பதே இல்லாமல் பார்த்துக்கொள்வேன் என்று ஆட்சியை தொடர்ந்தார் கேஜ்ரிவால். இதனால் அவருக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் மரியாதை உயர்ந்தது. அவரை அசைத்துப்பார்க்க பாஜக என்னென்னவோ செய்தது ஆனாலும் முடியவில்லை. இந்நிலையில்தான் 2020 சட்டமன்ற தேர்தல் வந்தது.
அர்விந்த் கேஜ்ரிவாலின் அணி 62 தொகுதிகளை வென்றது. மீண்டும் பாஜக மண்ணை கவ்வியது. அதுவரை நேர்மையாளராக, அரசு வாகனத்தைக்கூட பயன்படுத்தாத எளியவரான கேஜ்ரிவாலின் போக்கு அதன் பின்னர் மாறியது. ஆடம்பரத்திற்கு மாறினார். அவரது சகாக்கள் ஊழல் புகாரில் சிக்கினர். அதில் முக்கியமானது மதுபான ஊழல். இதில் சிக்கிய ஆம் ஆத்மியின் முக்கிய தலைகள் மக்கள் மதிப்பை இழந்தனர். கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். மதுபான ஊழல் வழக்கில் எவ்வித சால்ஜாப்பும் கேஜ்ரிவாலால் சொல்ல முடியவில்லை.
இதனால் அவரை எந்த ஊழலை எதிர்த்த வீரராக டெல்லி மக்கள் பார்த்தார்களோ அதே அளவுக்கு அவரை ஊழல் வாதியாக அதே ஆயுதத்தை வைத்து பாஜக பெரும் பிரச்சாரம் செய்தது. அதேபோல் எளிமையானவர் என்கிற பிம்பமும் அவரது முதல்வர் இல்லத்தை புதுபித்ததில் உடைந்தது. ஷீஷ் மஹால் என பாஜகவால் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்ட முதல்வர் இல்லம் புதுப்பித்தலுக்கான முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று சிஏஜி அறிக்கை கூறியது, பின்னர் 2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது என்கிற சிஏஜி அறிக்கையை பாஜக பெரிதாக பயன்படுத்தியது. இதனால் எளிமையானவர் என்கிற பிம்பம் உடைக்கப்பட்டது.
தான் முதல்வர் பதவியிலிருந்து விலகிய கேஜ்ரிவால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவையில் தோல்வியை தழுவியதை அடுத்து காங்கிரஸுடன் மோதலில் ஈடுபட்டார். இது ஹரியானா தேர்தலில் வீழ்ச்சியை அளித்தது, அடுத்து டெல்லியிலும் எதிரொலித்துள்ளது. கேஜ்ரிவால் எனும் நேர்மை, எளிமை பிம்பம் பாஜகவின் தொடர் முயற்சியாலும் மதுபான ஊழல், ஷீஷ் மஹால் போன்ற சர்ச்சைகளாலும் சிக்கி உடைந்துள்ளது. அது அவரது தனிப்பட்ட தோல்வியாகவும் எதிரொலித்துள்ளது.
இதையும் படிங்க: 'வாழ்நாளில் பாஜக எங்களை தோற்கடிக்கவே முடியாது...' மோடிக்கு சவால்விட்ட கெஜ்ரிவால்..!