அதிமுகவில் அடுத்த பிரளயத்துக்குக் காத்திருந்த சீனியர் நிர்வாகி… பதவி கொடுத்து ஆஃப் செய்த எடப்பாடியார்..!
வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் தென் மாவட்ட அதிமுக தொண்டர்களின் கவலையாக உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பரபரப்பாக வேலைகளை ஆரம்பித்து விட்டன. கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய விஜய்கூட வியூக வகுப்பாளர்களை நியமித்து ஜரூராக தயாராகி வருகிறார். ஆனால் அதிமுகவினரோ, திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வில் தவிக்கிறார்கள். ஏற்கனவே '10 தோல்வி பழனிசாமி' என எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வரும் நிலையில், சிதறு தேங்காய் போல உடைந்து கிடக்கும் அதிமுக தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறது என தென்மாவட்டங்களில் பட்டிமன்றமே நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா என கட்சி பிளவு பட்டு கிடக்கும் நிலையில், தற்போது செங்கோட்டையனும் ‘கழகத்தை’ கட்டிக் காக்க களம் இறங்கியுள்ளார். மறுபுறம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் கமிஷன் வேறு விசாரணையில் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க: 82 மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்… பட்டியலில் விடுபட்ட செங்கோட்டையன்..!
இந்தச் சூழலில் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்று நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் பல தொகுதிகளை குறி வைத்து களம் காணக் காத்திருந்த அதிமுகவினர்கூட சீட் கேட்பதில் பின்வாங்கும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் இப்படி தேர்தலில் நிற்க பலரும் காத்திருக்க, பசையுள்ளவர்களுக்கு சீட்களை வாரி வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அதில் ஒருவருக்கு கூட வெற்றி கிடைக்கவில்லை. பூஜ்ஜியமே மிஞ்சியது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் தென் மாவட்ட அதிமுக தொண்டர்களின் கவலையாக உள்ளது.
தென்மாவட்டங்களின் நிலவரம் இப்படி இருக்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுகவின் நிலைமை கலவரமாகி வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ப.மோகன் கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். தெற்கு, வடக்கு என மாவட்டத்தை பிரித்தப் பிறகு முன்னாள் எம்.எல்.ஏவான குமரகுரு, முன்னாள் அமைச்சர் ப.மோகனை ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியதால் வெகுநாட்களாக உள்கட்சி பூசல் நீடித்து வருகிறது.
சமீபத்தில நடந்த மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இது எதிரொலித்தது.அதாவது கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக ப.மோகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக உள்ள குமரகுருவோ நோட்டீஸ்கூட அச்சிடாமல் பப்ளிசிட்டியை குறைத்து விட்டார் என்கிறார்கள். இதனால் கூட்டமே சைலண்டாக நடந்து முடிந்தது.
எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ப.மோகனை ஓரங்கட்டுவதிலேயே குமரகுரு தரப்பு குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தி வருவதால் யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் குழப்பத்துடன் புலம்பி வருகிறதாம் ப.மோகன். இதன் தாக்கம் அடுத்தடுத்த நாட்களில் அதிமுகவில் எதிரொலிக்கலாம் என்கிறார்கள் கள்ளக்குறிச்சி ரத்தத்தின் ரத்தங்கள். விரக்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் ப.மோகனை சமாதானப்படுத்தும் வகையில் 2026 தேர்தல் பணிகளுக்காக பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.
இதையும் படிங்க: அதையெல்லாம் சொன்னால்… எடப்பாடியாரின் டீமுக்கு ஓ.பி.எஸ் மிரட்டல்..!