×
 

தாய்குலத்தின் வாக்குகளைத் தட்டித்தூக்க திட்டமா?... பட்ஜெட்டில் மகளிருக்கு மாஸான அறிவிப்புகள் வெளியிட்ட தமிழக அரசு....! 

மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், மகளிர் உதவித்தொகை என பெண்களை குறிவைத்து தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், மகளிர் உதவித்தொகை என பெண்களை குறிவைத்து தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

விடியல் பயணம்: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் 'விடியல் பயணம்' என்ற மகத்தான திட்டமும் ஒன்று. தமிழ்நாட்டு மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம், பேருந்துப் பயணம் செய்வோர்களில் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் அறிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்  இத்திட்டத்திற்கான மானியத் தொகையை 3,600 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். 

இதையும் படிங்க: இனி இவர்களுக்கு மாதம் ரூ.2000 - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

மேலும் தினமும், சராசரியாக 50 இலட்சம் மகளிர், பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மகத்தான இத்திட்டத்தினால் பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது என மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார். 

மகளிர் உதவித்தொகை: 

மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என அறிவித்த அவர்,  மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு- செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

புதுமைப்பெண் திட்டம்: 

 ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவியர் உயர்கல்வி பயில்வதை உறுதிசெய்யும் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தற்போது நான்கு இலட்சத்து ஆறாயிரம் மாணவியர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். 

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின், உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 40,276 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பதை பெருமையுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நிதியாண்டில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு: 

49. முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், தருமபுரி மாவட்டத்தில் தொலைநோக்குடன் விதைக்கப்பட்ட சுய உதவிக் குழு திட்டம் இன்று நாடெங்கும் கோடிக்கணக்கான மகளிரின் வாழ்வை மேம்படுத்திடும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. மகளிரிடையே சேமிப்புப் பழக்கத்தை வஊக்குவித்து, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி சமூகத்தில் பெண்களுக்கு உரிய இடத்தினை உறுதிசெய்திடும் நோக்கில், அவர்களின் வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கும் தேவையான நலத் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

தற்போது, 4.76 இலட்சம் மகளிர் திட்ட சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணிபுரியும் மகளிருக்கு விடுதிகள்: 

தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான தோழி' பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கெனவே தாம்பரம், திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. 

எதிர்வரும் நிதியாண்டில், காஞ்சிபுரம், ஈரோடு, ,கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 

 எதிர்வரும் நிதியாண்டில், சென்னை, கோவை மற்றும்மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் மொத்தம் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும் என்றும், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தால் பராமரிக்கப்படவிருக்கும் இவ்விடுதிகளின் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000: 

மூன்றாம் நாட்டிற்கே பாலினத்தவரின் நல்வாழ்விற்கென. முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது இன்றியமையாததாகும். எனவே, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள்.. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share