தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா..? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு..!
தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் சென்னையை அடுத்த வானகரம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது கண்டனத்திற்கு உரியது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபடவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்.. புள்ளிவிவரம் காட்டும் பாமக தலைவர் அன்புமணி..!
தமிழ்நாட்டிலுள்ள பல சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீட்டை விட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு விட்ட பிறகும் அங்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், முதலீட்டுக்கான வட்டி, பரமாரிப்பு செலவுகள் போன்றவற்றை அதிகரித்துக் காட்டியும், சுங்கக் கட்டண வசூலைக் குறைத்துக் காட்டியும் மோசடிகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன? அவற்றின் மூலம் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலாகியிருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப் படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும்; அதற்கு முன்பாகவே சுங்கக்கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை என்ன?
சுங்கக்கட்டண வசூல், கடந்த 4 ஆண்டுகளில் 135% அதிகரித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதியாகும். எனவே, புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... திமுக கூட்டணிக்கு ‘டாடா’ காட்டப்போகிறாரா வேல்முருகன்?