மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் மௌனிக்கிறது..? மக்களவையில் கொந்தளித்த கனிமொழி, டி.ஆர்.பாலு..!
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் மௌனிக்கிறது என்று மக்களவையில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக மீனவர்களின் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும் அவற்றை மீட்கவும் சிறைபட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு செய்தது என்ன என்று மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இலங்கையால் நாட்டுடைமையாக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு உரிய இழப்பீடு ஏதேனும் வழங்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய தினம் இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக எம்.பி.கனிமொழி பேசினார். இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை இலங்கை நாட்டு உடைமை ஆக்கிவிட்டது. அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு ஏதேனும் இழப்பீடு வழங்குமா என்றும் அவர் வினவினார்.
இதையும் படிங்க: முதல்வர், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு ... 'குடி' மகன்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!
கனிமொழியைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.பி.டிஆர்.பாலு புள்ளி விவரங்களை அடுக்கினார். அவரது உரை வருமாறு.. மிகுந்த மனவலியோடு மத்திய அமைச்சரின் கவனத்தை ஈர்க்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து மீனவர்கள் ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையால் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றி மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் கடிதம் எழுதி வருகிறார். இந்த விஷயத்தில் ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுங்கள் அல்லது இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
இதுபற்றி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய பதில் கடிதத்தில் அனுர குமார திசநாயக்க கூறியதாக சில கருத்துகளை குறிப்பிட்டு இருந்தார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அச்சுறுத்தல்கள் இல்லாத வகையில் இலங்கை கடற்படையின் ரோந்து இருக்கும் என அவர் கூறியதாக அந்த கடித்தில் ஜெய்சங்கர் சொல்லி இருந்தார்.
இதுபற்றி ராமேஸ்வரம் மீனவர்களிடம் கேட்டபோது களநிலவரம் வேறாக இருந்தது. ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையினர் வருவதாகவும், மீனவர்களை சிறைபிடிப்பதாகவும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதாகவும், மீன்பிடி உபகரணங்களை பறித்துச் செல்வதாகவும் கூறுகின்றனர். 6 மாதங்களுக்கு மேலாக 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடுகின்றனர். மீன்பிடிப்பது அல்லாமல் அவர்கள் செய்த பாவம் என்ன? 70-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விசாரணைக் கைதிகளால் வெவ்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாக நம்மை நம்பியுள்ள நாடு இலங்கை. ஆனால் அவர்கள் நமது மீனவர்களுக்கு பெருந்தொல்லை கொடுத்து வருகின்றனர். விரைவில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்ல உள்ளார். அவர் அங்கு இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவிடம் இதுபற்றி பேச வேண்டும். ஒரு அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகத் தான் போகும் என்று பேசினார்.
இதையும் படிங்க: ‘கேந்த்ரியா பள்ளிகளில் தமிழகத்துக்கு தமிழ் ஆசிரியர்கள் ஒதுக்கப்படவில்லை’: மத்திய அரசு விளக்கம்..!