இந்திய இறக்குமதிக்கு 26% வரி விதித்த அமெரிக்கா; உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் பின்னலாடை நிறுவனங்கள்..!
26 சதவீதம் வரி என்பது அதிகமாக இருந்தாலும் பின்னலாடை துறையை பொறுத்தவரை நமது போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறைவாகவே உள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 26 சதவீதம் வரி என்பது, போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பின்னலாடை துறைக்கு சாதகமாகவும் கூடுதலான ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்துள்ளதாகவும் பின்னலாடை துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார். பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரியை குறைக்கும் நோக்கில் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அந்த மாற்றம் நடக்கும் வரையில் இது அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகமே ஷாக்... இந்தியா மீது வர்த்தகப்போர் தொடங்கிய டிரம்ப்... நள்ளிரவில் அதிரடி
இந்த 26 சதவீதம் வரி என்பது அதிகமாக இருந்தாலும் பின்னலாடை துறையை பொறுத்தவரை நமது போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறைவாகவே உள்ளது. குறிப்பாக இந்தியாவின் பின்னலாடை துறையின் போட்டி நாடுகளான சீனாவிற்கு 34 சதவீதமும், வியட்னாமிற்கு 46 சதவீதமும், பங்களாதேஷிற்கு 37 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 29 சதவீதமும், அமெரிக்கா இறக்குமதி வரியை விதித்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவிற்கு 26 சதவீதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ஜவுளி ஆர்டர்கள் பெருமளவில் இந்தியாவை நோக்கி திரும்பும். எனவே பின்னலாடை துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்ள இது முக்கியமான தருணம் எனவும் மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் அதன் மூலம் மட்டுமே அதிகபட்ச ஆர்டர்களை இந்தியாவால் தக்க வைக்க முடியும் பின்னலாடை துறையும் இதன் மூலம் வளர்ச்சியை எட்டும்.
இறக்குமதி வரி 26 சதவீதம் என்பதால் அமெரிக்க பையர்கள், ஆடைகளின் விலையை குறைத்து கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவே அதனை சமாளிக்கவும் பின்னலாடை துறை தயாராக இருக்க வேண்டும். அதிகபட்ச ஆர்டர்கள் வரும் என்பதால் அனைத்து தொழில்துறையினரும் கூடுதல் ஆர்டர்களை பெற்று பணிகளை முடிக்க தேவையான தொழில் வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் அதன் மூலம் மட்டுமே ஆர்டர்களை விரைந்து முடிக்க முடியும் என்ன பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ‘ரொம்ப ஸ்மார்ட்’..! பரஸ்பர வரி சிறப்பாக செயல்படும்: அதிபர் ட்ரம்ப் புகழாரம்..!