NDA-விலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்.. இனி அது நடக்காது.. அமித் ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் அறிவிப்பு!!
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் என்று பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிஹார் வந்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 2025 பிஹார் சட்டமன்றத் தேர்தலை முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் சந்திப்போம் என்று அமித் ஷா அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், " அமித் ஷாவின் பதவிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களால் பிஹார் மாநிலம் பயனடைந்துள்ளது, இத்திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் உதவியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி நான் தவறு செய்துவிட்டேன். மீண்டும் இந்தத் தவறு நடக்காது என்று கூறிக்கொள்கிறேன்.
முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் (ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி) என்ன செய்தார்கள்?அவர்கள் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றனர். ஆனால், சமூகங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களை ஒருபோதும் அவர்களால் நிறுத்த முடியவில்லை. பிஹாரரில் பெயருக்குத் தகுந்த சுகாதாரப் பராமரிப்பு இல்லை. நல்ல கல்வி வசதியும் இல்லை. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின.
இதையும் படிங்க: கிறுக்கு வேலைகளில் ஈடுபடும் முதலமைச்சர் நிதிஷ்..! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்..!
1990-களின் மத்திய பகுதியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014ஆம் ஆண்டில்தான் பிரிந்தோம். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022ஆம் ஆண்டில், மீண்டும் பிரிந்தோம். இருப்பினும், கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒரு முறை மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். பாஜகவுடன் கூட்டணி முறிவுக்கு எனது கட்சியில் உள்ள சிலர்தான் காரணம்.” என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தலுக்குப்பிறகு நிதிஷ்குமார் பாஜகவுக்கு மாபெரும் துரோகம் செய்வார்... பி.கே போட்ட அணுகுண்டு..!