தப்பு செஞ்சவங்கள தண்டிக்காம விவசாயிகளை வஞ்சிக்கிறது நியாயமா..? சீமான் ஆவேசம்..!
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்த பிரச்சனையால் தர்பூசணி விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்து தவறான தகவல்களை பரப்பியதால் விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது மனவேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
ஒரு சில விஷமிகள் தர்பூசணியில் செயற்கை ரசாயனம் கலப்பதாக எழுந்த புகாரில் ஒட்டுமொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்படும் வகையில் பொய்த் தகவல்களை பரப்பிய தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பா.? கலங்கி நிற்கும் விவசாயிகள்.. அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை!!
கோடை காலத்தில் மட்டுமே நடக்கும் பெருமளவு விற்பனையை நம்பி நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை பானங்களையும் பழங்களையும் உள்நாட்டு ஏழை விவசாயிகள் விளைவிக்கின்றனர்., செயற்கை குளிர்பானங்கள் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையில் பளபளப்பாக பாதுகாக்கப்படும் நிலையில், நம் நாட்டு விவசாயிகள் வெயிலிலும் மழையிலும் வெம்பாடுபட்டு விளைவிக்கும் இயற்கை உணவுகள் தெருவோரத்தில் கிடக்கிறது என்பது வேதனை நிறைந்த உண்மை என கூறியுள்ளார்.
தற்போது தான் மக்களிடையே மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் அக்கறை அதிகரித்து வருகிறது., இதனை ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாய கடமை., ஆனால் அதற்கு நேர் மாறாக இயற்கையாக விளைவிக்கப்படும் பழங்களில் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்படுவதாக அரசு அதிகாரிகளே வதந்தி பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது அறமற்ற கொடுஞ்செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தவறு செய்பவர்களை கண்டறிந்து தண்டிப்பதை தவிர்த்து தமிழ்நாட்டின் தர்பூசணி விவசாயிகள் அனைவரையும் அரசு தண்டிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய சீமான், அரசு அதிகாரிகளின் இத்தகைய அவதூறு பரப்புரைகளுக்கு பின்னால் பன்னாட்டு செயற்கை குளிர்பான நிறுவனங்களின் திட்டமிட்டு சதி இருப்பதாக விவசாயிகள் சந்தேகிப்பது நியாயமானது தான் என்று தெரிவித்துள்ளார். எனவே, தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பொய்பரப்புரையால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தில்லை தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு.. கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க நீங்கள் யார்..?