ஆளுநர் உரையை படிப்பாரா ஆர்.என்.ரவி? இல்லை வெளிநடப்பு செய்வாரா? ஜன.6-ல் சட்டப்பேரவையில் நடக்கப் போவது என்ன?...
அரசியல் கட்சிகளைத் தாண்டி ஆளுநரும் , அரசும் மோதிக்கொள்ளும் போக்கு ஒருசில மாநிலங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அது உச்சத்தில் நிற்கிறது என்பதே உண்மை.
2025-ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 6-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் எவ்வாறு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கி விட்டது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரின் போது நிகழ்ந்த சம்பவங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது..
பொதுவாக ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பது ஆளுநர் உரையுடன் தான் தொடங்கும். அந்த உரையை ஆளுங்கட்சி தயாரித்துக் கொடுக்கும். அது அப்படியே வாசிக்கப்படுவது தான் இத்தனை ஆண்டுகால பழக்கம். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு அரசு தயாரிக்கும் உரையை அப்படியே படிப்பதில்லை. அதில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதனை வாசிக்காமல் விடுவதும், தவிர்ப்பதும் தான் அவரது பாணியாக இருக்கிறது.
இதையும் படிங்க: திமுக பார்முலாவை கையில் எடுக்கும் தவெக... தயாராகும் மா.செ. பட்டியல்...!
இதுதான் 2023-ல் நடந்தது. அரசு தயாரித்து கொடுத்து உரையில் திராவிட மாடல் ஆட்சி என்ற பதத்தை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து விட்டார். குறிப்பிட்ட சில தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமலும் தவிர்த்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்து ஆளுநர் விலகியதைக் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரம் அவசரமாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போதும் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுவதுமாக ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை. தனக்கு உடன்படாத கருத்துகள், சொற்கள் இருப்பதாக கூறி வாழ்க பாரதம் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே அவையை விட்டு ஆளுநர் வெளியேறினார் என அப்போது சர்ச்சை எழுந்தது.
இந்த சூழ்நிலையில் நடப்பாண்டிற்கான ஆளுநர் உரையை தமிழக அரசு தயாரித்துள்ளது. அந்த உரையின் நகலை சபாநாயகர் அப்பாவு இன்று(3/1/25) கிண்டி ராஜ்பவனுக்கு கொண்டு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கி உள்ளார். அப்போது, தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சரியாக இருக்கிறது என்ற வாசகங்கள் இருந்தால் தயவுசெய்து நீங்களே நீக்கிவிடுங்கள் அவ்வாறு இருந்தால் வாசிக்க மாட்டேன் என ஆளுநர் கூறியுள்ளாராம். அதேபோன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் விசாரித்து அறிந்தவற்றை உரையில் சேர்க்க வேண்டும் என கண்டிப்புடன் கூறினாராம். ஆனால் அவ்வாறு நடைபெற திமுக அரசு அனுமதிக்காது.
அப்படியெனில் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? அல்லது வெளிநடப்பு செய்வாரா? அல்லது 2 நிமிடங்களில் முடித்துக் கொள்வாரா? அவர் மீது மீண்டும் ஒரு தீர்மானம் அரசால் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளைத் தாண்டி ஆளுநரும் , அரசும் மோதிக்கொள்ளும் போக்கு ஒருசில மாநிலங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அது உச்சத்தில் நிற்கிறது என்பதே உண்மை.
இதையும் படிங்க: மகன் தலைவர், பேரன் இளைஞரணித் தலைவர்..இது குடும்ப கட்சி இல்லையா மருத்துவர் ராமதாஸ் அவர்களே...!