×
 

டெல்லி நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டுகள் எரிந்த விவகாரம்.. FIR ஏன் பதிவாகவில்லை? குடியரசு துணைத் தலைவர் கேள்வி..!

டெல்லி நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டுகள் எரிந்த விவகாரத்தில் ஏன் எப்ஐஆர் பதிவாகவில்லை என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவாகவில்லை, இவர்கள் எல்லாம் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா, விசாரணையில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களா என்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் 14ம் தேதி ஹோலி பண்டிகையன்று, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்கும் பணயில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டபின் நடந்த மீட்புப்பணியில் வீட்டில் ஒரு அறையில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லி நீதிபதி அளித்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்.. அலாகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

டெல்லியில் நேற்று நடந்த மாநிலங்களவை பயிற்சித் திட்ட மாணவர்கள் மத்தியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை முதல்தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரம் ஒவ்வொரு இந்தியரையும் ஆழ்ந்த கவலை கொள்ளச் செய்தது.

இதை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தது எப்படி செல்லுபடியாகும். இதுவே இந்த ரூபாய் நோட்டுகள் சாமானியர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், ராக்கெட் போன்று வேகமெடுத்திருக்கும். ஆனால், இப்போது இந்த விவகாரம் அடங்கிவிட்டது. 3 நீதிபதிகள் விசாரணை என்பது நிர்வாக ரீதியாகத்தானே தவிர நீதி விசாரணை அல்ல.

சட்டப்படியோ அல்லது அரசியலமைப்புச் சட்டப்படியோ அந்த 3 நீதிபதிகள் குழுவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் நியமிக்கவில்லை. பின்னர அந்த கமிட்டியால் என்ன செய்ய முடியும், பரிந்துரைதான் அதிகபட்சமாக வழங்க முடியும், அந்த பரிந்துரைகள் யாருக்கு, எதற்காக வழங்கும். நீதிபதிகளுக்கு என்னவிதமான விசாரணை முறை இருக்கிறது, இறுதிநிலையாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, நீதிபதியை நீக்க முடியும். 

இந்த விசாரணைக் குழு அமைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த விசாரணையில் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், புழு இருக்கட்டும், எலும்புக்கூடுகள்கூட இருக்கட்டும், அது பொதுத்தளத்தில் வைக்கப்பட வேண்டும். சுத்தம் செய்யப்பட வேண்டும். 

நாம் நம்மை நாமே கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தாமதம் விளக்கம் அளிக்க் கூடியதா? மன்னிக்கத்தக்கதா? இது சில அடிப்படை கேள்விகளை எழுப்பவில்லையா? இந்த சம்பவத்துக்குப்பின் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. 

இப்போது தேசம் பெருமூச்சுடன் காத்திருக்கிறது. மக்கள் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் மரியாதையுடனும் பார்த்து வந்த நமது நிறுவனங்களில் ஒன்று, கூண்டில் நிறுத்தப்பட்டதால், நாடு அமைதியற்றதாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் எந்த விசாரணையும் முன்னேற்றம் அடையாது.

ஒவ்வொரு குற்றமும் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால், அது ஒரு குற்றமாகும், மேலும் தண்டனைக்குரிய குற்றத்தைப் புகாரளிக்கத் தவறினால் அதுவும் ஒரு குற்றம் என்பது நாட்டின் சட்டம். எனவே, ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று நீங்கள் அனைவரும் யோசிப்பீர்கள்.

சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை. அது நீதிபதிகளாக இருந்தால், எப்ஐஆர்  பதிவு செய்ய முடியாது. நீதித்துறையில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகார வரம்பைக் கொண்டதாக லோக்பால் அமர்வு உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கே அரசு பணிகளில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share