விஜய் அரசியலுக்கு வருவதாக முடிவு எடுத்து தவெகவை 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஆரம்பித்தார். அதன் பின்னர் கட்சி அணிகள் அமைக்கப்பட்டு, கட்சி கொடி, பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் விஜய் எழுச்சி உரையாற்றினார். ஆட்சியில் பங்கு, அதிகார பகிர்வு, சித்தாந்த எதிரி, அரசியல் எதிரி என அவர் பேசிய பேச்சுகள் பெரிய அளவில் தமிழக அரசியலில் பிரதிபலித்தது.

இந்நிலையில் தவெகவில் முக்கிய நிர்வாகிகள் நியமனம், கட்சியின் செயல்பாடுகள் எல்லாமே அடுத்து பெரிய அளவில் வேகம் எடுக்காமல் மந்தக் கதியில் இருந்தது. அதனால் விஜய் கட்சியின் மீது விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் கட்சியை வேகப்படுத்த விஜய் சில அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் ஒன்று பரந்தூர் மக்களை சந்திப்பது என்பது. அதன்படி பரந்தூர் சென்ற விஜய் நம் மக்களை நேரடியாக சந்திக்காமல் தேர்தல் பிரச்சாரம் போல் வேனில் நின்று கொண்டு பேசியதும், பத்து நிமிடம் மட்டுமே பரந்தூரை பற்றி மட்டுமே பேசியதும், மீண்டும் விமர்சனமாக எழுந்தது.
இதையும் படிங்க: 2ம் ஆண்டு விழாவிற்கு தயாராகும் தவெக... பங்கேற்பாளர்கள் முதல் ஏற்பாடுகள் வரை முழு விவரம் இதோ...!

தவெகவிற்குள் புஸ்ஸி ஆனந்தும், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்கிறார்கள். யாரையும் கட்சிக்குள் விடுவதில்லை என்கிற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இணைய விரும்பும் பிரபலங்கள் நிர்வாகிகள் யாரையும் உள்ளே சேர்க்காமல் இருவரும் செயல்பட்டு வருவதாக கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது. கட்சியில் நிர்வாகிகள் பொறுப்புகள் கூட தங்களை இஷ்டப்பட்டோர்களுக்கு மட்டுமே வழங்குவதும், வசதி படைத்தவர்களுக்கு வழங்குவதும் விமர்சனமாக வைக்கப்படுகிறது.

ஆனாலும் விஜய் இது பற்றி கண்டுகொள்ளாமல் செல்கிறார் என்றும், கட்சிக்குள் ஒரு குமுறல் உள்ளது. இந்த நிலையில் தான் மாவட்ட செயலாளர்கள் நியமனம், செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டது, அந்த நேரத்தில் நிர்வாகிகளை விஜய் தனியாக சந்தித்து பேசினார், பின்னர் ஆதவ் அர்ஜுன் அழைத்து கட்சிக்குள் இணையுமாறு விஜய் கேட்டுக் கொண்டார். இந்த நேரத்தில் அதிமுகவிலிருந்து விலகிய சி.டி.நிர்மல் குமார், திமுக ஆதரவு பேச்சாளராக இருந்த மோட்டிவேஷன் பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோரையும் கட்சிக்குள் இணைத்தனர்.

கட்சிக்குள் இணைவதற்கு சில நிபந்தனைகளை வைத்து உள்ளே வந்தார் ஆதவ் அர்ஜுனா. அதில் முக்கியமானது பொதுச்செயலாளருக்கு இணையான தேர்தல் பிரச்சார பொறுப்பு அளிக்கப்பட வேண்டும், தனது பணியில் யாரும் குறிப்பிடக் கூடாது, நீங்களும் நானும் நேரடியாக பேசும் வண்ணம் தொடர்புகள் இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசி ஆதவ் கட்சிக்குள் வந்தார், அதன் பின்னரும் ஆதவ் அர்ஜுனுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், ஆதவ் அர்ஜுனா பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோரை நேரடியாக அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைத்தார்.

விஜய்யுடனான சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் சில உண்மைகளை போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. அதில் முக்கியமானது கட்சி தற்போது இருக்கும் நிலையில் தனியாக போட்டியிடுவது என்பது இயலாத காரியம், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், கட்சிக்கு வெளியில் இருந்து வருபவர்களை இணைத்துக் கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் போன்ற விஷயங்களை வலியுறுத்திவிட்டு பிரசாந்த் கிஷோர் சென்றார். ஆனால் அவர் சென்ற பின்னரும் அந்த இருவர் தங்கள் எண்ணத்தை மட்டுமே அமல்படுத்தி வருவதை காண முடிகிறது. பல்வேறு கட்சிகளில் இருந்து தவெகவுக்குள் இணைவதற்காக காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பலர் உற்சாகம் இழந்து இணையும் முடிவை கூட மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் தவெகவுக்குள் இணைவதற்கு விஜய்யை சந்தித்தார், ஆனால் அந்த தகவல் சீமானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் காளியம்மாள் சங்கடத்திற்கு உள்ளானார். அதன் பின்னர் தவெகவிற்குள் இணைவதற்காக காத்திருந்து, காத்திருந்து எதுவும் நடக்காத சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியை விட்டு காளியம்மாள் வெளியேறி உள்ளார். தற்போது அவர் தவெக எந்த முடிவும் அறிவிக்கா விட்டால் திமுகவில் இணையும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்று கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இருவர் செயல்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து விஜய் இடம் பிரச்சினைகளை கொண்டு செல்வதற்கும், கட்சியை, நிர்வாகிகளை தயார் படுத்துவதற்கும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கட்டமாக ஆண்டு விழாவில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பிரசாந்த் கிஷோரை வைத்து பேச வைப்பது என்று முடிவெடுத்து அதற்கான பர்மிஷன் வாங்கி விட்டார். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்கின்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள துடிக்கும் அந்த இருவர் கடும் கடுப்பில் இருக்கிறார்களாம். ஆனாலும் தனது செயலை செய்து முடித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. ஆண்டுவிழா கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் அரை மணி நேரத்திற்கு மேலாக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். அவரது உரையாடலில் கட்சி தற்போது இருக்கும் நிலை, தமிழகத்தில் கூட்டணி என்பது சாத்தியமா? கட்சியை அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் என பல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் பேசிய பின்னர் ஆதவ் அர்ஜுனாவும் பேச இருப்பதாக கூறப்படுகிறது. இறுதியாக நடிகர் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மொத்தத்தில் நாளை நடைபெற உள்ள தவெக ஆண்டு விழா கூட்டம் தமிழக அரசியல் ஒரு பரபரப்பை உருவாக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதையும் படிங்க: மீண்டும் சென்னை வரும் பிரஷாந்த் கிஷோர்.. இந்த முறை விஜய்யுடன் ஒரே மேடையில் கைகோர்ப்பு.!