உத்தரபிரதேச மாநிலம் முகல் சராய் பகுதியில் கிழக்கு மத்திய ரயில்வே சார்பில் ரயில் இன்ஜின் தலைமை ஆய்வாளர்கள் பணிக்கான துறை ரீதியிலான தேர்வு நடைபெற்றது. அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மூன்று இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் முகல் சராய் பகுதியில் 3 இடங்களில் தேர்வு எழுத வந்த ரயில்வே ஊழியர்கள் 17 பேர் கையால் எழுதப்பட்ட வினாத்தாள்களின் புகைப்பட நகல்களுடன் இருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு தொடர்பாக கோட்ட சீனியர் எலக்ட்ரிகல் இன்ஜினியர் ஒருவர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் 8 பேர், அவர்களுடன் தேர்வு எழுத வந்த பெயர் தெரியாத சில நபர்கள் மற்றும் சிலருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ரயிலில் இனி ஈசியா சீட் கிடைக்கும்.. 10 நிமிடத்துக்கு முன்பு இதை பண்ணா மட்டும் போதும்.!!
சிபிஐ விசாரணையில் தேர்வுக்கான வினாத்தாளை உருவாக்கும் பணிக்கான பொறுப்பு மூத்த டி ஈ அதிகாரிக்கு அளிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவர் ஆங்கிலத்தில் கேள்விகளை தயாரித்திருக்கிறார். இதன் பின்னர் ரயில் என்ஜின் ஓட்டுனர் ஒருவரிடம் அதனை கொடுத்து இருக்கிறார்.

அது பின்னர் ஹிந்தியில் மாற்றம் செய்யப்பட்டு சூப்பிரண்டு அளவிலான அதிகாரி இடம் தரப்பட்டுள்ளது. அவர் சில ரயில்வே ஊழியர்கள் வழியே தேர்வு எழுத வந்தவர்களிடம் அவற்றை கொடுத்து இருப்பதும் அம்பலமானது.
இந்த விவகாரத்தில் அந்த மூத்த அதிகாரி மற்றும் ரயில்வே ஊழியர்களை பணம் வசூலிப்பு மற்றும் வினாத்தாள் விநியோகித்தல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

டிரைவர்களாக பணிபுரிந்த துறை சார்ந்த ஊழியர்கள் 17 பேரும் வினாத்தாளுக்காக பணம் கொடுத்ததற்காக தேர்வு அறையிலேயே வினாத்தாள்களுடன் பிடிபட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என சிபிஐ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை ரயில்வே அதிகாரிகள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த விவகாரத்தில் இதுவரை 8 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளது. வினாத்தாள்கள் அவற்றின் புகைப்பட நகல்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தான் இனி பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளையும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) மூலமே நடத்துவது என்றும், பொதுவான முறையில் கணினி அடிப்படையில் நடத்தவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே வாரியம் நேற்று நடத்திய உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஒரு காலண்டர் அடிப்படையில் நடத்தப்படும் இதற்காக அனைத்து ரயில்வே மண்டலங்களும் ஒரு காலண்டரை உருவாக்கும் என்றும் அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையாக தேர்வுகள் நடத்துவதில் உள்ள அனுபவம் காரணமாக ஆர்ஆர்பி இடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாது.. ரயில்வே விதிகள் மாற்றம்..