அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதில் இருந்தே அதிமுகவில் புயல் வீசத் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும் மிகவும் சப்போர்ட்டாக இருந்த ஜெயக்குமார் தற்போது அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவராக வலம் வந்த மற்றொரு அமைச்சர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்திருந்தார். அப்போது அதிமுகவுடனான கூட்டணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து அறிவித்திருந்தார். அப்போது அமைக்கப்பட்டிருந்த மேடையில் 6 நாற்காலிகள் போடப்பட்டிருந்தது பேசுபொருளாக இருந்தது. இதனிடையே, அந்த மேடையில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் ஏறியுள்ளனர். அப்போது இடமில்லை எனக்கூறி கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணியை தனது அருகே அமரவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமாரை மட்டும் மேடையை விட்டு இறக்கச் சொன்னதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “அறிவிப்பு அவங்களது... கோரிக்கை எங்களது...” - அடம்பிடிக்கும் ஆர்.பி.உதயகுமார்...!

இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி மீது ஆர்.பி.உதயகுமார் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆர்.பி.உதயகுமார் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அமித் ஷாவிற்கு விருந்து வைக்கப்பட்டது. இதில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்ற நிலையில், ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்ட சமூகத்தினர் மீது எடப்பாடி பழனிசாமி பாராமுகம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. டிடிவி தினகரன், விகே சசிகலா வரிசையில் முக்குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டியதாக அதிமுகவில் பேச்சு கிளம்பியுள்ளது. அதேபோல் அவர் தனது அருகே மேடையில் அமர வைத்த கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி இருவரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதிமுகவில் சலசலப்பு ஆரம்பித்துள்ளது.

2021ம் ஆண்டு தேர்தலை அடுத்து அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. அதன் பின்னர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுவெளியில் மாற்றி, மாற்றி விமர்சித்து வந்தனர். அப்போது இபிஎஸுக்கு பக்கபலமாக இருந்து பாஜகவிற்கு பதிலடி கொடுத்து வந்தவர் ஆர்.பி.உதயகுமார். அப்படிப்பட்ட தன்னை இன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்ததும் எடப்பாடி பழனிசாமி ஒதுக்குவதாக ஆதங்கத்தில் இருக்கிறாராம் ஆர்.பி.உதயகுமார்.
இதையும் படிங்க: மக்கள் மனதில் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் முதலிடம்.. உரக்கச் சொல்லும் ஆர்.பி. உதயகுமார்.!!