சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
தேசிய அளவில் நரேந்திர மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படுகிறது. 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து 30 தொகுதிகளில் வென்றது. அதன்பின் மீண்டும் இயல்பாக அமைந்துள்ள கூட்டணி இது.

இந்த கூட்டணிக்காக அதிமுக தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அதிமுக - பாஜக என்பது உறுதியான கூட்டணியாகும். இதில் எந்த குழப்பமும் கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் என்றார். இந்த நிலையில் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், அதிமுக தற்கொலை செய்து கொண்டதாகவே நான் கருதுகிறேன். தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. நடிகர் விஜய்யின் வாக்கு வங்கி என்ன என்பதும் நமக்கு தெரியவில்லை. நடிகர் விஜய்க்கு 12%-18% வாக்குகள் இருக்கும் என்கின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி முன்பிருக்கும் 2 ஆப்ஷன்... அமித் ஷா போட்ட கன்டிஷன்... ஏற்குமா அதிமுக?

நிலைமை இப்படி இருக்கும் போது வெறும் 5% அல்லது 3% வாக்குகளே உள்ள பாஜகவுடன் அதிமுக ஏன் கூட்டணி வைத்தது? அப்படி கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி தன்னை தானே தற்காத்துக் கொள்ளவே ஒரு சர்க்கஸ் நடத்தி இருக்கிறார்.
2026 சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணியானது அதிமுகவுக்கு நிச்சயம் உதவப் போவதும் இல்லை. இந்த கூட்டணியால் பாஜகவுக்கு மட்டுமே லாபம். தனி மனிதராக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பாயாது; அவர் சிறைக்கு போகாமல் இருக்கலாம்.

இதனைத் தவிர அதிமுகவுக்கு வேறு எந்த ஒரு பயனுமே இல்லை. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கி இஸ்லாமியருக்கு எதிரான கட்சிதான் பாஜக என மீண்டும் நிரூபித்துள்ளது பாஜக.
இதேபோல இந்து ஆலயங்கள், சொத்துகள் தொடர்பாக சட்டம் நிறைவேற்றுமா பாஜக? இதை கேள்விக்குட்படுத்தாமல் தன்னுடைய சுய லாபடத்துக்காக, எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பாதையை கைவிட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு எடப்பாடி பழனிசாமி, காவி உடையே போட்டு நடக்கலாம்தான். பாஜகவுக்கு உகந்தது மதவன்முறைகள். இனி தமிழ்நாட்டில் அதையும் நடத்திவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 2026இல் NDA ஆட்சி.. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு கெத்தாக அறிவித்த அமித் ஷா.!!