துப்பட்டாவை கழட்டி வச்சிட்டு வாங்க; முதல்வர் பங்கேற்க நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நிகழ்ந்த அவலம்!
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது நுழைவாயிலில் இருந்தவர்கள் மாணவிகள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாக்களை வாங்கி வைத்துக்கொண்டு, பிறகே உள்ளே அனுமதித்துள்ளனர். அதேபோல் கருப்பு நிறத்தில் எடுத்து செல்லப்பட்ட கூடை, ஹேண்ட் பேக், பேக் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி, வெளியே வைத்து பாதுகாத்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகே மாணவிகளிடம் கருப்பு நிற துப்பாட்டாக்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மாணவிகள் சிலர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “செக்கின் போது கருப்பு நிற துப்பட்டாவிற்கு அனுமதி இல்லை. இங்கேயே வைத்துவிட்டு உள்ளே செல்லுங்கள் எனக்கூறினார்கள். அதனால் வெளியேயே வைத்துவிட்டு சென்றோம். நோட்டு, புத்தகங்களையும் வெளியே தான் வைத்துவிட்டுச் சென்றோம். எந்த காரணமும் சொல்லாமல், கருப்பு நிற பொருட்களை மட்டும் இங்கேயே வைத்துவிட்டுச் செல்லுங்கள் எனச் சொன்னார்கள். திரும்ப வரும் போது துப்பட்டாக்களை எடுத்துக்கொண்டோம்” எனக்கூறியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள சார் குறித்தும், இச்சம்பவத்திற்கு உரிய நீதி வேண்டியும் தமிழகம் முழுவதும் தடையை மீறி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இது திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ள நிலையில், முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் மாணவிகளின் துப்பட்டாக்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதையும் படிங்க: லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள்... “ஒருவர் அல்ல 4 பேர்”... அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் எங்கே கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுவிடுவார்களோ? என்ற அச்சத்தில் தான் திமுகவினர் இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கி இருக்கக்கூடும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வின் போது மாணவிகளின் துப்பட்டா அகற்றப்பட்டதற்கு கொந்தளித்த மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகளுக்கு இப்படியொரு நிலையா? என சமூக வலைத்தளங்களில் விவாதம் வெடித்துள்ளது.
இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சி ..வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சரித்திரம் ..மேடையில் புட்டுப்புட்டு வைத்த திமுக எம்.பி கனிமொழி