தரம் குறையுமா? தடைபடுமா? - சர்ச்சையில் காலை உணவுத்திட்டம் - சென்னையில் வெடித்த சிக்கல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான இத்திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இடை நிற்றலை குறைக்கும் நோக்கத்தோடும், மாணவர்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 22 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். அந்தந்த பள்ளிகளில் உள்ள சத்துணவு பணியாளர்கள் மூலம் காலை உணவு தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது.
சென்னையில் 358 பள்ளிகளில் 20 கோடி ரூபாய் செலவில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு அருகில் உள்ள அம்மா உணவக பணியாளர்கள் காலை உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். ஒரு நபருக்கு 13 ரூபாய் வீதம் காலை உணவு தயார் செய்யப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான இத்திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநகர ஆணையர் குமரகுருபரன் தலையீட்டால் காலை உணவுத்திட்டம் தனியார் வசம் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விடுமுறை தினத்தையொட்டி சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்...
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 சமையலறைகளில் 11 பள்ளிகளுக்கு ஒரு சமையலறை என்ற அடிப்படையில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை தனியாக வேன்கள் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இதற்கு சுமார் ஒரு மணி நேரம் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. இதை எல்லாம் தவிர்க்க சென்னையில் உள்ள பிரபல உணவக கான்ட்ராக்டர்களிடம் தினசரி எத்தனை உணவு தேவை என ஆர்டர் கொடுத்துவிட்டால் அவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகித்துவிடுவார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சத்தான, சுவையான, ஆரோக்கியமான உணவை சூடாக அனைவருக்கும் பரிமாறுவதே காலை உணவுத் திட்டத்தின் நோக்கம் என்றும், ஒருவேளை தனியார் வசம் வழங்கப்பட்டால் தரம் குறையக்கூடும் என்றும், சரியான அளவு உணவு அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்குமா? என்பதும் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் விரைவில் தனியார் பேருந்து சேவை?...