ஒத்தை ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. தேதியை, நேரத்தை கூறுங்கள்.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை...!
சென்னை அண்ணாசாலைக்கு ஒற்றை ஆளாக, தனியாக வருகிறேன், தேதியை நேரத்தை முடிவுசெய்து விட்டுக் கூறுங்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சேலம் ஐந்துரோடு பகுதியில் பேசிய பாஜக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது "அண்ணா அறிவாலயத்தை விடுங்கள் முடிந்தால் அண்ணாசாலைக்கு வந்து பார்க்க சொல்லுங்கள்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஒத்தை ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன், உங்கள் மொத்த படைபலத்தையும் காவல்துறையையும் வைத்து தடுத்துப் பாருங்கள் என சவால் விட்டார். மேலும், பொத்தாம் பொதுவாக அண்ணாசாலை என்றால் எப்படி? எந்த இடத்தில்? எந்த தேதியில்? என்று தெளிவாக கூறுங்கள், நான் வருகிறேன், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என அண்ணாமலை கூறினார். கும்பமேளாவிற்கு செல்ல உள்ளதாகவும், அமித் ஷா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் 26-ந் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் அண்ணாசாலைக்கு வரத்தயார் என அண்ணாமலை அப்போது குறிப்பிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசுவதாக அண்ணாமலை விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியவற்றை எடுத்துக்காட்டி விமர்சித்தார் அண்ணாமலை. எனவே இனிமேல் மரியாதை கொடுத்தால் தான் மரியாதையோடு பேசமுடியும் என்றும், தரம் தாழ்ந்து பேசினால் தரம் தாழ்ந்தே பதிலளிக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லி சட்டசபை புதிய சபாநாயகர் பாஜகவின் விஜேந்தர் குப்தா.. 'ஆம் ஆத்மி' சபாநாயகரால் நீக்கப்பட்டவரை தேடி வந்த பதவி..!
அதேபோன்று கெட்அவுட் மோடி என்று எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட்டிங் செய்யப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும் ஆவேசமாக பதிலளித்த அண்ணாமலை, இன்று இரவுக்குள் உங்களால் (திமுகவினரை குறிப்பிட்டு) எவ்வளவு ட்வீட் போட முடிகிறதோ, போட்டுக் கொள்ளுங்கள் என்றார். எவ்வளவு என்ற எண்ணிக்கையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 6 மணிக்கு நான் கெட் அவுட் ஸ்டாலின் (GET OUT STALIN) என்று ட்வீட் போடுகிறேன். அதற்கு பாரதிய ஜனதா தொண்டர்களும், தமிழக மக்களும் எவ்வளவு ஆதரவு அளிக்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் எண்ணிக்கை எவ்வளவு, எங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை பார்த்து விடுவோம் என்று அண்ணாமலை கூறினார்.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மட்டும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை. எண்ணற்ற நிதிகளில் அதுவும் ஒன்று. ஆனால் திமுகவினர் அதனை திசைதிருப்பி கல்விக்காக ஒட்டுமொத்தமாக நிதி தராதது போல் ஏமாற்றுகிறார்கள் என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: 'தைரியம் இருக்கா..? அண்ணாசாலை பக்கம் வா அண்ணாமலை...' உஷ்ணமாகிய உதயநிதி..!