×
 

துபாயில் தந்தை- மகன் நீரில் மூழ்கி பலி.. நெல்லையில் தாய் தற்கொலை முயற்சி... பதற வைக்கும் சம்பவம்!

தந்தையைப் பார்க்க துபாய்க்கு சென்ற மகனும் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகரம் சாலியர் பகுதியில் அமைந்துள்ள மினிக்கொடி தெருவை சேர்ந்தவர் மாதவன், இவரது மனைவி பெயர் விமலா, மாதவன் கடந்த சில வருடங்களாகவே துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவ்வப்போது நெல்லை வந்து குடும்பத்தினருடன் தங்கிச் செல்வார்.

மாதவன் விமலா தம்பதியரின் மகன் கிருஷ்ண சங்கர், இவர் சென்னை சி ஏ இன்ஸ்டிடியூட்டில் பட்டய கணக்காளர் படிப்பு படித்து வந்தார். தனது கல்வி தொடர்பாக பயிற்சிக்காக நண்பர்களுடன் துபாய் சென்று இருக்கிறார் கிருஷ்ண சங்கர்.

பயிற்சி முடித்து ஒரு வாரம் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க விரும்பிய கிருஷ்ண சங்கர் கடந்த 12ம் தேதி அவரது தந்தை மாதவன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று தங்கி உள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஆந்திரப் பெண் பொறியாளர்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; "என் மகளை கொன்றது யார்?" தந்தை ஆவேசம்

பின்னர் அங்கிருந்த குடியிருப்புக்கான நீச்சல் குளத்தில் குளித்த போது ஆழம் தெரியாமல் இறங்கிய கிருஷ்ண சங்கர் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். அங்கு இருந்தவர்கள் அலறி துடிக்க சத்தம் கேட்டு ஓடி வந்த மாதவன் தனது மகனை காப்பாற்ற நீருக்குள் இறங்கி உள்ளார். மகனைக் காப்பாற்றும் போராட்டத்தில் வெற்றி பெற முடியாமல் மாதவனும், அதிக நீரை குடித்து அந்த நீச்சல் குளத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

இதனை அடுத்து ஐந்து நாள் கழித்து இருவரது உடலும் துபாயிலிருந்து 16ஆம் தேதி காலையில் நெல்லை கொண்டுவரப்பட்டது. மாதவனின் மனைவியும் கிருஷ்ண சங்கரின் தாயாருமான விமலா தனது கணவர் மற்றும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது அந்த பகுதியையே பதற வைத்தது.

பின்னர் அதே தினம் மாதவன் மற்றும் கிருஷ்ண சங்கரின் உடல்கள் அந்த பகுதிக்கு அருகில் உள்ள சிந்து பூந்துறை மின்சார சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எரி ஊட்டப்பட்டது. மாதவனின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் கிருஷ்ண சங்கர் உடன்படித்த நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் அந்த அஞ்சலியில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கிற்கு வந்த அனைவரும் திரும்பி சென்றபோது மாதவனின் மனைவி விமலா மகன் மற்றும் கணவரின் மறைவு குறித்த துக்கம் தாங்காமல் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்டு அவரது உறவினர்கள் உடனடியாக அவரை நெல்லை தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அதிக ரத்த சேதாரம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் 

கணவர் மற்றும் மகனின் மறைவு குறித்த துக்கம் தாங்காமல் மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது நெல்லை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

இதையும் படிங்க: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஆந்திரப் பெண் பொறியாளர்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; "என் மகளை கொன்றது யார்?" தந்தை ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share