ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்... முந்தி கொண்ட காங்கிரஸ்... கோபத்தில் திமுக.... யோசிக்கும் அதிமுக..
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாங்கள்தான் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் முந்தி கொண்ட அறிவித்ததும், திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அதிமுக போட்டியிடலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருப்பதும், பாஜக போட்டியிடும் முடிவுடன் இருப்பதும் தெரிகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஈரோடு கிழக்கில் ஈவிகேஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இடையே முதல் முறிவு ஏற்பட்டது, இந்த இடைத்தேர்தலில் தான் ஓபிஎஸ்-எடப்பாடி என அதிமுக பிரிந்து நின்று சந்திக்கும் தேர்தலாக மாறியது. ஓபிஎஸ்சுக்காக அண்ணாமலை, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் அதிமுக தலைவர்களிடம் தூது சென்றதும், ஒன்று பட்டு நின்றால் ஆதரவு என நிபந்தனை விதித்ததும் நடந்தது.
பாஜகவின் நிபந்தனையும், அண்ணாமலையின் துடுக்கு பேச்சினாலும் கோபமுற்றிருந்த அதிமுக பாஜக நிபந்தனையை புறக்கணித்தது. தேர்தல் தலைமை அலுவலகத்திலிருந்த பாஜக தலைவர்கள் படங்களை நீக்கினர். இதனால் பாஜக அதிமுக பிளவு உறுதியானது. நாம் தமிழர் கட்சி, தேமுதிக தனித்தனியாக போட்டியிட்டனர். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும், இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலா என்று திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஃபார்முலா உண்டு. ஆனால் அதையும் தாண்டி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு ஃபார்முலா, பட்டி ஃபார்முலா என்கிற புதிய பார்முலாவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பொழுது கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் வேக, வேகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்கள் அகற்றம் - பரபரக்கும் ஈரோடு!
காலை 7 மணிக்கே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்காக நியமிக்கப்பட்ட திமுக பொறுப்பாளர்கள், வாக்காளர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்துவிடுவார்கள். அங்கு 3 வேலை அசைவ சாப்பாடு விருந்து, பொழுதுபோக்க திரைப்படம், டி, காபி இத்யாதி இரவு 8 மணிக்குமேல் டின்னர் முடிந்து வீட்டுக்கு போகும் போது கவனித்து அனுப்பியதால் யாரும் வேலைக்கு போகாமல் பட்டியில் தானாக வந்து அடைப்பட்டனர். இதனால் வாக்கு கேட்க எதிர்க்கட்சிகள் வேட்பாளர்கள் வரும்போது பூட்டிக்கிடந்த கதவுகளும், அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு ஆளே வராமலும் அவதிப்பட்டனர்.
தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் பெரிதாக நடவடிக்கைகளே வரவில்லை. இடையில் அவ்வப்போது அருகிலுள்ள ஊர்களுக்கு இரண்டுநாள், மூன்று நாள் சுற்றுலாவும் அழைத்து சென்றனர். கடைசி வாரத்தில் சரி கவனிப்பும் நடந்தது. இந்த நிகழ்வுகளை ஒரு நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் ராஜேஷ் தொடர்ச்சியாக படம் பிடித்து காட்சிப்படுத்தினார். இதனால் இந்த விவகாரம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததால் செய்தியாளர் ராஜேஷ், கேமரா மேன் கருப்பு தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நடந்தது.
ஈரோடு கிழக்கு பார்முலாவாக, பட்டி ஃபார்முலா என இது அழைக்கப்பட்டது. வாக்காளர்களை தங்கள் கைக்குள்ளையே வைத்துக் கொள்வது ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல் திருமண மண்டபங்களில் தொடர்ச்சியாக தங்க வைத்து எதிர்கட்சிகள் பிரச்சாரத்தை முறியடிக்க வேலை நடைபெற்றது. இதுபோன்ற ஒரு இடைத்தேர்தலை இதற்கு முன் பார்த்ததில்லை என்கிற அளவுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றது. அதிமுக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. வாக்கு வித்தியாசம் 66000 க்கு மேல் இருந்தது.
கடந்த 2021-ல் திருமகன் ஈவேரா வாங்கிய வாக்குகளே 67,300 தான் ஆனால் இம்முறை வித்தியாசமே 66000 க்கு மேல் என்றால் எந்த அளவுக்கு தேர்தல் நடந்தது என்கிற விமர்சனமும் வைக்கப்பட்டது. நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டது. இது வழக்கமான இடை தேர்தலில் நடப்பது தான் என்றாலும் இதை வைத்து அதிமுக இனி அவ்வளவுதான் என்கிற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 10-ல் 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றிய வரலாறு உண்டு.
கொங்கு மண்டலத்தில் அதிமுக கோட்டையாக இருந்த காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவில் இருந்தது. இந்த நிலையில் 2021 தேர்தலில் தொகுதி கைமாறியது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் வென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் 2021 சட்டமன்ற காலம் முடிவடைவதற்கு முன்பே சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட சட்டமன்ற சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒட்டி உடன் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், இந்த விவகாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியை தன்வசம் வைத்துக் கொள்ளலாம் என்று திமுக கருதியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தி தன் வசப்படுத்தலாம் என்று திமுக தலைமை நினைத்திருந்த வேளையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பை உடனே நடத்தி "ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழக முதல்வரிடம் இது குறித்து பேசி உரிய முடிவு எடுப்போம்" என்று பட்டென்று அறிவித்துவிட்டார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை.
இது திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்றாலும் தோழமைக் கட்சியான திமுகவுடன் கலந்து பேசாமல் உடனடியாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவித்ததும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்ததும் திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பின் மூலம் திமுக போட்டியிடும் வாய்ப்பை சாதுரியமாக செல்வ பெருந்தகை தட்டி கழித்து விட்டார் என்றும் காங்கிரஸ் ஆர் பெருமையுடன் பேசிக் கொள்கிறார்கள்.
என்னதான் காங்கிரஸ் நிற்கும் என்று பேசினாலும் திமுகவின் துணை இல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெல்வது சாத்தியம் அல்ல. இந்த முறை காங்கிரஸ் இவ்வாறு முந்திக்கொண்டு அறிவித்ததை அடுத்து திமுக தலைமை தனது கௌரவ பிரச்சினையாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை கருதுமா? என்பது கேள்விக்குறியே.
அதேபோன்று இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடுமா என்கிற கேள்வியும் அனைவராலும் வைக்கப்படுகிறது. காரணம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடைந்த தோல்வி, இடைத்தேர்தலில் அடைந்த தோல்வி, அதைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வி என தொடர் தோல்வி அடைந்த அதிமுக அதற்கு அடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். இதற்கு காரணம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு வாக்காளர்களை கவர பல்வேறு வழிமுறைகளை கையிலெடுப்பது நிச்சயம் அதிகார பலம் ஆகியவற்றால் அதிமுக வெல்வது கடினம் என்பதால் போட்டியிடவில்லை என்று கூறப்பட்டது.
இதே போன்று ஈரோடு கிழக்கு தொகுதியிலும் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற முடிவை அதிமுக எடுக்குமா? அல்லது பொது தேர்தலுக்கு ஓராண்டு இருக்கின்ற நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்சாரமாக அதை மாற்றி , ஏற்கனவே இழந்த வாக்குகளை இரண்டாம் இடம் பெற்றாலும் பெரிய அளவில் பெற வேண்டும் என்று அதிமுக முயலுமா? என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது. இதற்கான முடிவை சனிக்கிழமை நடக்கும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடுக்க உள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
இதே போன்று பாஜக தலைவர் அண்ணாமலை தாங்கள் போட்டியிடுவது குறித்து என்டிஏ கூட்டணி தலைவர் உடன் பேசி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். என்டிஏ கூட்டணியில் பெரிய கட்சி தற்போது பாஜக தான். பாமக அந்த கூட்டணியில் இல்லை. ஆகவே மற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் என்று பார்த்தால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் தான் இவர்களிடம் பாஜக பேசி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. அதனால் ஈரோடு கிழக்கில் பாஜகவும் போட்டியிடும் முடிவில் இருக்கிறது என்றும், நாளை அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும், இதை ஒரு பிரச்சார களமாக மாற்றி அதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கி அண்ணாமலை தனது அரசியல் வெற்றியை நிரூபிப்பார். தேர்தலில் வெல்ல முடிய விட்டாலும் அதிக வாக்குகளை அதிமுக விட கூடுதலாக பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
ஈரோடு கிழக்கு தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு உரை கல்லாக அமையும் என்று தெரிகிறது. புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் திமுக நிழலில் தாங்கள் இல்லை என்று அறிவித்த நிலையில், இன்று இதோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவு என்று முதலில் அறிவித்துள்ளார். ஆகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போக போக அதிக சுவாரஸ்யம் தரும் என தெரிகிறது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ..இன்று வெளியாக வாய்ப்பு ..!