×
 

#BREAKING நெற்பயிர் சேதமானதால் விரக்தி- விவசாயி விஷமருந்தி தற்கொலை!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கனமழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை

திருவாரூர் அருகே நெற்பயிர் சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள உப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே வீட்டில் இருந்த நகையை அடகுவைத்து 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

முனியப்பன் விவசாயத்திற்காக ஏற்கனவே வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்த நிலையில், நண்பர்களிடமும் பணம் கடன் வாங்கியதாக தெரிகிறது.  நெற் பயிர்கள் சேதமடைந்ததால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான முனியப்பன், பயிருக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். 

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் முனியப்பனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு முனியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். நெற் பயிர்கள் சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share