×
 

செங்கோட்டையன் மீது கை வைத்தால்... தலைமையில் மாற்றம் ஏற்படும்..! எடப்பாடியாருக்கு கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!

செங்கோட்டையனை நீக்கினால் தலைமையில் மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நீடிக்க மாட்டார்.

''செங்கோட்டையன் மீது கை வைத்தால் அதிமுக தலைமை மாற்றம் ஏற்படும்'' என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.சி.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவர், ''இனி அதிமுகவில் திரும்பவும், இரண்டு அணி, மூன்று அணி, நான்கு அணி என்று அணிகள் பெருகி கொண்டு போகாது. அணிகள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த இயக்கத்திற்கு பிணியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டப்படுவார். தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும். ஒரு கட்சியில் ஒரு தலைவர் புதிதாக பொறுப்பு ஏற்கிறபோது, மூன்று விதங்கள் நடக்கும். ஒன்று இருக்கிற கட்சிக்காரர்களை அரவணைத்து ஒருமுகப்படுத்தி அதிகமாக அவர்களை உற்சாகப்படுத்தி வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவார்கள். இரண்டாவது, பொதுமக்கள் அந்த தலைவரை ஏற்றுக்கொண்டு வாக்களிப்பார்கள். மூன்றாவது, புதிதாக வருகிற அந்த வாக்காளர்கள் அந்த தலைவரை ஏற்றுக்கொண்டு வாக்களிப்பார்கள்.

ஒரு இடத்தில் நான் பேசுகிற பொழுது  பொதுமக்கள் என்னிடம் ''அம்மா காலம் வரை நாங்கள் அதிமுகவிற்குத்தான் வாக்களித்தோம். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை ஒன்றுபடுத்த தவறுகிறார். சுயநலப் போக்குடன் நடந்து கொள்கிறார். அதனால் அவருக்கு வாக்களிப்பதற்கு, எங்களுக்கு அம்மா காலத்தை போல உற்சாகமாக இல்லை'' என்கிற கருத்தைதான் சொல்கிறார்கள். அதேபோல் புதிதாக வந்திருக்கிற வாக்காளர்களும் அதே கருத்தில் தான் இருக்கிறார்கள். எல்லோரும் என்ன எதிர்பார்க்கிறார்கள் இந்த இயக்கம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டும்.

இதையும் படிங்க: எடப்பாடி ஓ.கே. சொன்னா அடுத்த நொடியே அதைச் செய்ய தயார்... ஓபிஎஸை எச்சரித்த ஆர்.பி. உதயக்குமார்...!

 உலகத்துக்கே தெரிகிறது. ஒரு ஆளுக்கு மட்டும் புரிய மாட்டேன் என்கிறது, தெரிய மாட்டேன் என்கிறது. தெரிந்தாலும் கூட, மீண்டும் திமுகவே வர வேண்டும் என்று இவர் ஏதேனும் மறைமுக ஒரு ஒத்துழைப்பு கொடுக்கிறாரோ என்று தான் அதிமுக கட்சியில் இருக்கிற அடிமட்ட தொண்டர்களே பேசுகிறார்கள். செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை இருக்காது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா?

 முதலில் ஒருத்தர் உங்களை உரசி பார்த்தால் கொஞ்சம் அமைதியாக இருப்பீர்கள். இரண்டாவது தடவை கொஞ்சம் முட்டி பார்த்தால் சிறு எதிர்ப்பை காட்டுவீர்கள். மோதிப் பார்த்தால் என்ன நடக்கும்? இப்போது அதிமுகவில் இருக்கிறவர்களை, ஏற்கனவே பிரிந்தவர்களை, மனமாச்சரியம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து செல்லுங்கள் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிற நேரம் இது. மாறாக, கட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து பயணித்தவரை மேலும், ஒதுக்கப்படுவார், நீக்கப்படுவார், ஓரங்கட்டப்படுவார் அவரது மனமாச்சரியங்கள் பெரிது படுத்தப்படும் என்றால் பிறகு எப்படி அந்த தலைமையை ஏற்றுக்கொள்வார்கள்?

அவிநாசியில் அந்த விழா நடக்கிறது. மிகவும் எளிதாக தனது கருத்தை செங்கோட்டையன் சொல்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன் சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''நான் கவனிக்காமல் விட்டு விட்டேன். இனிமேல் இந்த தவறு நடக்காமல் பாத்துக்கலாம், அண்ணே...'' என்று சொல்லி அந்த பிரச்சினையை அப்போதே முடித்திருக்கலாம்.

அப்படியானால் அது மட்டுமே பிரச்சனை அல்ல. அது இல்லாமல் பல அதிருப்திகள். எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை ஒன்றிணைக்கத் தவறுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா திமுக வலிமையாக இல்லை என்கிற அந்த குறை. அடிமட்ட அதிமுக தொண்டர்கள் திருப்தியாக இல்லை தலைமையின் மீது நம்பிக்கையோடு இல்லை என்கிற கருத்து தான் அதிகமாக இருக்கிறது. செங்கோட்டையனை நீக்கினால் தலைமையில் மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நீடிக்க மாட்டார்.

கட்சி நல்லா இருக்கும். தலைமையில் மாற்றம் ஏற்படும். இப்போது செங்கோட்டையன் ஒருவர் ஆரம்பித்து இருக்கிறார். இன்னும் தொடர்ச்சியாக பலர் வருவார்கள். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2013-ல் இருந்து 2021 வரை கனிம வளத்தில் நடந்த கொள்ளை, ஊழல், தாது மணல் கடத்தல் என 5000- 6000 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பீட்டை அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

அது மட்டுமல்ல, இதற்கு உடந்தையாக இருந்த கீழ் நிலை அதிகாரிகள் மட்டுமின்றி அமைச்சர்கள், அரசாங்கத்தில் உயர் பொறுப்பு வகித்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ இயக்குனர் அவரது நேர்பார்வையில் இதை புலனாய்வு செய்ய வேண்டும். அமலாக்கத்துறை இதன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கவரித்துறை இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆகையால், அவர்களுக்கு இனி சிக்கல்தான்'' என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ , கே.சி.பழனிசாமி எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: 'நான் சாதாரண தொண்டன்… அவர்தான் பெரிய ஆளாச்சே…' அதிமுக நிர்வாகிக்கு செங்கோட்டையன் பதிலடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share