தமிழக அரசின் மசோதாவை ஏற்றுக்கொள்ள அவசியம் இல்லை.. கவர்னர் பதில்; உச்ச நீதிமன்றத்தில் இன்று 3-ம் நாள் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் இன்று மூன்றாம் நாள் விசாரணை; கவர்னர் மற்றும் நீதிபதிகள் தரப்பு விவாதம்
தமிழக அரசின் மசோதாவை கவர்னர் நிறுத்தி வைத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த கவர்னர் ரவியின் வக்கீல் "மசோதாக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை" என்று பதிலளித்தார்.
மாநில கவர்னருக்கு, மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தி தெரிவிப்பது என நான்கு முக்கிய அதிகாரங்கள் உள்ளன" என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் தாமதம் செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதே போல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திலும் சிக்கல் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மசோதாக்களை 3 ஆண்டுகள் நிறுத்தி வைத்தது ஏன்..? தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. இன்றும் விசாரணை.!
இந்த இரண்டு விவகாரங்களிலும் தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு ரிட் மனுக்கள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியது.
நீதிபதிகள் ஜே. பி. பார்த்திபாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணையை நடத்தி வருகிறது. முதல் நாள் விசாரணையின் போது கவர்னருக்கு சில அறிவுரைகளை வழங்கிய நீதிபதிகள் அதற்கு பதில் அளிக்கும்படி 24 மணி நேரம் கெடு விதித்து இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற விசாரணையில் தமிழக சட்ட மசோதாக்களுக்கு பதில் அளிக்காமல் மூன்று ஆண்டுகளாக அவற்றை கிடப்பில் போட்டது ஏன் ? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர்.
இன்று இந்த வழக்கில் விசாரணை தொடங்கியதும், "கவர்னர் எதுவும் விளக்கம் அளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும் ? சம்பந்தப்பட்ட மசோதாவில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்? சம்பந்தப்பட்ட மசோதா மீது ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை கவர்னர் எப்படி உணர்ந்தார்? என்பதற்கு பதில் அளிக்கும் படி நீதிபதிகள் மீண்டும் அறிவுறுத்தினார்கள்.
கவர்னரின் முட்டுக்கட்டை;
நீதிபதிகள் அதிரடி
அதற்கு கவர்னர் தரப்பில் ஆஜரான வக்கீல், "துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிகளுக்கு எதிராக உள்ளது இந்த நிலையில் கவர்னர் அதற்கு எப்படி ஒப்புதல் அளிப்பார்?" என்று கேட்டார்.
உடனே நீதிபதிகள், "பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?கவர்னர் அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது" என அறிவுரை வழங்கினார்கள்.
அதற்கு பதில் அளித்த கவர்னர் தரப்பு வக்கீல், "பல்கலைக்கழகங்களின் செயல்பாடு குறித்து கவர்னர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டது. யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்களின் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது.
அரசியல் காரணங்களுக்காகவே துணை வேந்தர் மசோதாவை மாநில அரசு கொண்டு வந்தது. கவர்னர் சில முரண்பட்ட காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால் அரசு மற்றும் கவர்னர் என இரு தரப்பும் இணைந்து முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு அனுப்பலாம்.
குறிப்பாக இதன் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே கவர்னரை கேட்க வைக்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது. கவர்னர் அரசியல் அமைப்பு பிரிவு 200-இல் விதி 1 - ன் கீழ் முடிவெடுத்தே ஆக வேண்டும் என்று கூறுவது 200 வது பிரிவை முரணாக திருத்தி கூறுவதாக ஆகும்' என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், "கடந்த 2023 ஆம் ஆண்டு மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு இருக்கிறார்? இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?" என கேட்டனர். அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வக்கீல் (அட்டெர்னி ஜெனரல்), " இல்லை. மசோதாக்கள் அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களில் தனது முடிவை தெரிவித்துவிட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்து இருந்தார்.."
நீதிபதிகள்:-
ஜனாதிபதியும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா? ஜனாதிபதி மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்தது என்ன? முடிவு எடுக்கப்படாத நிலையில் அது அப்படியே கிடப்பில் கிடக்குமா?
கவர்னர் தரப்பு வக்கீல் , "ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியிடம் உள்ளது என்றால் அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை" என்றார்.
தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.
இதையும் படிங்க: தமிழக அரசு- கவர்னர் ரவி மோதல் விவகாரத்தில் 24 மணி நேரம் 'கெடு': உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை! முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா?