அமெரிக்க பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு நோட்டீஸ்..! குஜராத் நீதிமன்றத்துக்கு மத்திய சட்டத்துறை பரிந்துரை..!
அமெரிக்கப் பங்குச்சந்தையில் செய்த மோசடி தொடர்பாக கெளதம் அதானி, உறவினர் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப குஜராத் சிறப்பு நீதிமன்றத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் பரிமாற்ற ஆணையம், கடந்த மாதம் ஹாக் கன்வென்ஷன் மூலம் அதானி மீது நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து, அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் பரிமாற்ற ஆணையம் அதானிக்கும், சாகர் அதானிக்கும் அளித்த நோட்டீஸை குஜராத் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாக் சர்வீஸ் கன்வென்சன் (Hague Convention) என்பது கடந்த 1965ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். இதன் பணி என்பது பன்னாடுகளுக்கு இடையே சிவில் மற்றும் வர்த்தகரீதியான வழக்குகளில் நீதிமன்றம் சார்ந்த ஆவணங்களை ஒவ்வொரு நாட்டுக்கும் அனுப்பி வைப்பதாகும். 68 நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ள ஹாக் கன்வென்சன், சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வழக்கில் தொடர்புடைய நபர்கள் வேறு நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸை அந்நாட்டு அரசின் உதவியால் வழங்குவதாகும். அந்த வகையில் ஹாக் சர்வீஸ் கன்வென்சன் இந்திய அரசின் உதவியுடன் அதானிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ராயப்பேட்டை மெட்ரோ ரயில் பணிகளில் சுணக்கம்.. முட்டுக்கட்டை போட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் சாடல்..!
அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அதானிக்கும், சாகர் அதானிக்கும் முறைப்படி வழக்கு சார்ந்த ஆவணங்களைுயும், நோட்டீஸையும் வழங்கும். நிறுவனம் அமெரிக்காவில் நூறுகோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, கௌதம் அதானியின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்திருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இது தொடர்பான வழக்கு நியூயார்க்கில் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சட்டவிவகாரங்கள் பிரிவு அதானிக்கு சம்மன் அனுப்பியது குறித்து உறுதி செய்ய மறுக்கிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தபின், அமெரிக்க நீதிமன்றத்தில் அதானிக்கு எதிராக வழக்கு நிலைக்குமா என்பது உறுதியில்லாத நிலை இருக்கிறது. அதானிக்கு எதிராக அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இதனால், அதானி குழுமம், அமெரிக்காவில் வர்த்தகப் பணிகளை விரைவில் தொடங்கும் என தி பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்..! ரூ.24 ஆயிரம் கோடி கேட்கிறது மோடி அரசு.. காரணம் என்ன..?