×
 

வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது.. கோவை மக்கள் நிம்மதி.. இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டை..!

கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை வனத்துறையினர் சிசிடிவி மூலம் கண்காணித்து வலை விரித்து பிடித்துள்ள சம்பவம் கோவை மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை நடமாட்டம் அதிகமாக தென்பட்டது. சில தினங்களுக்கு முன்பு வெண்ணிலா என்ற விவசாயி, தனது 5 ஏக்கர் தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை மர்ம விலங்கு கொன்றது. அதன்  சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, சிறுத்தை ஆடுகளை வேட்டையாடுவதும், ஒரு ஆட்டை கவ்வி செல்வதும் தெளிவாக பதிவாக இருந்தது. அங்கு இருந்த 4 ஆடுகளை கொன்ற சிறுத்தை மீண்டும் அதே பகுதிக்கு வந்து மீண்டும் ஆடுகள் உள்ளதா ? என்று தேடியதும் சிசிடிவி காட்சிகளில் இருந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த விவசாயிகளும், பொதுமக்களும் பீதியில் ஆழ்த்தனர்.

அதே போல பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் மேலும் சிறுத்தை ஒன்று தென்பட்டு உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ப பல்கலை நிர்வாகம் அச்சம் கொண்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அளித்த பல்கலைக் கழக நிர்வாகம், விடுதியில் யாரும் தங்க வேண்டாம் என வீட்டிற்கு அனுப்பி வைத்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. வனத் துறையினர் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இதையும் படிங்க: கோவையில் புதிய பயங்கரம்.. பைக்கில் வந்து செயின் பறிக்கும் பெண்கள்.. முதியவர்கள் தான் டார்கெட்..

சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக உறுதியான இரண்டு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து, அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.  ஏற்கனவே ஆடுகளை கொன்ற இடத்திற்கே சிறுத்தை ஓணாப் பாளையம் பகுதியில் மீண்டும் வந்து ஆடுகளை தேடி வந்தது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது.  


இந்நிலையில் நேற்று இரவு பூச்சியூர் அருகே உள்ள கலிங்க நாயக்கன் பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர்  அங்கு சென்று பதுங்கி இருந்த சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று இரவு சுமார் 11.45 மணி அளவில், ஒனாபாளையம் பூச்சியூர் பூபதி ராஜா நகர் பகுதியில் புதிதாக  கட்டி கொன்டிருக்கும் வீட்டில்  சிறுத்தை புகுந்து கொண்டது. 

சிறுத்தை இருந்த இடத்திற்கு கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிறுத்தையை தொடர்ந்து கண்காணித்து ட்ராப் நெட் ( trap net) மூலம் பிடித்தனர். பின்னர் சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டது. உரிய அனுமதிக்கு கிடைத்த பின்னர் அதனை அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட வனத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தையை பிடித்தது அப்பகுதி மக்கள் இடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share