மும்பை தாக்குதல்: தஹவ்வுர் ராணாவை இந்தியாவுக்கு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரான தஹவ்வூர் ராணா, மும்பையில் 2008ம் ஆண்டு தாக்குதல் நடத்த முக்கியக் காரணமாகவும், மூளையாகவும் இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26 முதல் 29ம் தேதிவரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 அப்பாவி மக்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுவீழ்த்திய நிலையில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவுத் கிலானியுடன், தொழிலதிபர் தஹவ்வூர் ராண நெருக்கமாகவும், துணையாகவும் இருந்தார். மும்பை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகள் செய்வது, அவர்களுக்கு நிதியுதவி செய்தது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்த உதவிகளை தஹவ்வூர் ராணா செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
மும்பை தாக்குதலில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தஹவ்வூர் ராணா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு இந்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அமெரிக்க நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் ராணாவை இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி இந்திய அ ரசு சார்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்து ராணாவை கைது செய்து இந்தியா அழைத்துச் செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்திலும், துணைத்தூதரகத்திலும் கோரப்பட்டது.
இதையும் படிங்க: 350 ரூபாய், 5 ரூபாய் புதிய நோட்டுகள் வெளி வருகிறதா? 200 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
இந்தியாவின் கோரிக்கைக்கு அப்போது இருந்த அதிபர் ஜோ பைடன் அரசாங்கம் உதவி செய்து, ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்தது. கடந்த 1997ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கைதிகளை மாற்றும் ஒப்பந்தமும் கையொப்பமானதன் விளைவாக ராணாவை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. ஆனால், ராணா தரப்பில் அமெரிக்காவின் கீழ் நீதிமன்றம், பல்வேறு மாவட்ட நீதிமன்றங்கள், சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ராணா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றார். இந்த மனுவின் விசாரணையும் கடந்த 21ம் தேதி நடந்த நிலையில், ராணாவின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. லாஞ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள தடுப்புக்காவல் மையத்தில் 64வயதான ராணா அடைக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் ராணாவின் மனுவை விசாரிக்க மறுத்து, அவரை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என உத்தரவிட்டது. இதையடுத்து, இந்திய அரசு சார்பில் ராணாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு,அதற்கான அனுமதி கிடைத்தவுடன் ராணா அழைத்துச் செல்லப்படுவார்.
இதையும் படிங்க: ஐந்து கண் நாடுகள்…. இந்திய - கனடா சிக்கல்! அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவு