“ஆளுநர் மாளிகைக்கு வாங்க” - தவெக தலைவர் விஜய்-க்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும் படி தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்படும். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே மீண்டும் வெடித்தது. இதனால் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளிநடப்பு செய்தார். இந்த செயலைக் கண்டிக்கும் வகையிலும் அரசியல் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 117 மாவட்ட செயலாளர்கள்...முதல் பட்டியலில் 25 பேர் அறிவிப்பு...விஜய் ஆசி...பட்டியல் இதுவா?
இதனிடையே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற முறையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்கும் படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முறையான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பை விஜய் தரப்பு ஏற்குமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வண்டிக்கு வாடகை தரக்கூட காசில்லையா?... உழைச்ச பணத்த கொடுக்கலன்னா ஆடியோ வெளியாகும் - தவெக தலைவர் விஜய்க்கு அடுத்த சிக்கல்!