இனி பர்மிஷன் வாங்கிவிட்டுத்தான் போராட்டம்...அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு முன் ஜாமின் அளித்த நீதிபதி..
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை ஷாப்பிங் மாலில் ’யார் அந்த சார்?’ போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக யார் அந்த சார்? என்ற பதாகயை ஏந்தி கடந்த 29ம் தேதி அதிமுக ஐடி பிரிவு சார்பில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த அண்ணாசாலை போலீசார் முதற்கட்டமாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன்கோரி பத்மநாபன், பூவரசன் உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு கூடாது...காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
அவர்கள் மனுவில், போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் முகமது ரியாஸ் ஆஜராகி வாதிட்டனர். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், எந்த வித அனுமதியும் பெறமால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால் மற்ற வணிக வளாகங்களில் போராட்டம் நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, எதிர் காலத்தில் இது போன்று முறையாக அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கினார்.
இதையும் படிங்க: தரம் உயர்த்தப்பட்டும் "நோ யூஸ்"..அரசு மருத்துவமனையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்