×
 

இந்தியாவை பாரத் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடி.!

நம் நாட்டின் பெயர் பாரதம் எனும் போது அதை அப்படியே அழைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நம் நாட்டின் பெயர் பாரதம் எனும்போது, அந்த பெயரைக் கொண்டுதான் நமது நாடு அழைக்கப்பட வேண்டும். 2023இல் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்துக்கான அரசு அழைப்பிதழில் பாரதக் குடியரசு தலைவர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் அப்படியே அச்சிட்டிருந்தார்கள்.



ஏனெனில், இந்தியா என்பது ஆங்கிலப் பெயர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயர்தான் இந்தியா. அதற்குப் பதிலாக பாரதம் என்றே அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), இந்திய அரசியலமைப்பு போன்ற நிறுவனங்கள் ஏன் இன்னமும் ‘இந்தியா’வை பயன்படுத்த வேண்டும்?  இது அவசியமா?

பிரிட்டிஷ் ஆட்சி மக்களின் மனதில் ஆழமாகப் பதித்துள்ளது. இது இன்றுவரை அவர்களின் உணர்வையும் வடிவமைத்து வருகிறது. மக்களின் மனதில் இருந்து காலனித்துவப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டும். இந்த இரட்டைத்தன்மை குறித்து பொதுமக்களும் கேள்வி கேட்க வேண்டும். முகலாயர்கள் பாரதத்தின் மீது படையெடுத்து நாட்டின் கோயில்கள், குருகுலங்களை அழித்தார்கள். அவர்கள் இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தை அழித்து மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும், அது ஆங்கிலேயர்களைப் போல நம்மை தாழ்ந்தவர்களாக உணர வைக்கவில்லை.



பிரிட்டிஷ் ஆட்சி, அவர்கள் நம்மை விட சிறந்தவர்கள் என்று உணர வைத்தது. இடதுசாரி தாராளவாதிகள் முன்வைத்த வரலாற்றுக் கதைகள், கடந்த கால பாரத ஆட்சியாளர்களை ஒடுக்குபவர்களாகக் காட்டியது. எனவேதான், அவற்றை தவறு என நாம் கூறுகிறோம். அறிவுசார் மறுசீரமைப்பு மிகவும் அவசியம். இதில், நாடு முழுவதும் ஒரு புதிய அலை வீச வேண்டும். அது மற்ற நாடுகளை இழிவுபடுத்துவதாகவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதாகவோ இருக்கக் கூடாது. ஆனால் நம்முடைய அடையாளத்தை மீட்டெடுக்க உதவும். மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், முன்மாதிரியாக வாழ வேண்டும். பாரதம் உலகளாவிய நன்மைக்காக மட்டுமே எப்போதும் நிற்கும்" என்று தத்தாத்ரேய ஹொசபலே பேசினார்.

இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க்… விரைவில் இந்தியாவில் ஸ்டார் லிங்க்!!

இதையும் படிங்க: 400 பேருடன் ரயில் கடத்தல்: பாகிஸ்தானுக்கு இந்த விஷயத்திலும் இந்தியாதான் ஹெட் மாஸ்டரு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share