தேசத்தை உலுக்கிய ‘கருப்பு பட்ஜெட்’ ! எப்போது தாக்கலானது, காரணம் என்ன?
இந்த கருப்பு பட்ஜெட்டுக்குப் பின், மத்திய அரசு பல்வேறு நிதி சிக்கன நடவடிக்கைகளை எடுத்தது. பொருளாதார கொள்கைகளை வகுத்து, உற்பத்தியைப் பெருக்க திட்டங்கள் தீட்டியது.
மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராம் நாடாளுமன்றத்தில் தனது 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொது பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகப்படுத்தப்படுமா, ஏதாவது வரிச்சலுகை இருக்குமா என நடுத்தர குடும்பத்தினர் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர். தொழில்துறையினரும், உற்பத்தி துறையினரும் சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகிறது. கடந்த பல தசாப்தங்களாக நாடாளுமன்றத்தில் எத்தனையோ பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மக்களைக் கவரும் அறிவிப்புகள், ஏராளமான சலுகைகள் கொண்ட பாபுலிஸ்ட் பட்ஜெட், வரிச்சலுகைகள் கொண்ட பட்ஜெட், பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட் என பல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஆனால், ஒரே ஒருமுறை நாடாளுமன்றத்தில் “கருப்பு பட்ஜெட்” தாக்கல் செய்யப்பட்டது. ஏன் அந்த பட்ஜெட்டுக்கு மட்டும் கருப்பு பட்ஜெட் என பெயரிடப்பட்டுள்ளது, யார் தாக்கல் செய்தது, எதற்காக தாக்கல் செய்யப்பட்டது, காரணம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
1971ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போருக்குப்பின் இந்திய பொருளாதாரம் மிகுந்த பலவீனமடைந்தது, பல சவால்களை எதிர்கொண்டது. போரின் போது மத்திய அரசின் கருவூலங்களில் இருந்த ஏராளமான தொகை செலவிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலோடு, இயற்கையும் சேர்ந்து தேசத்தை பெரிய சோதனைக்குள்ளாக்கியது. மிகப்பெரிய வறட்சி நிலை, பஞ்சம் ஏற்பட்டு, நாட்டின் வேளாண் உற்பத்தி, விளைச்சல் மிக மோசமாகப் பாதித்தது.
இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதா: வரைவு அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்
இதனால் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வரவேண்டிய வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது, மக்கள் தொழில் இல்லாமலும், வேளாண்மை பொய்த்ததாலும் பஞ்சத்தாலும்,வறட்சியாலும் பெரிய சிரமத்துள்ளாகினர். வருவாய் குறைந்தாலும், மத்திய அரசுக்கு செலவுகள் குறையவில்லை. இதனால் கடுமையான பற்றாக்குறை மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பிரதமராக மறைந்த இந்திராகாந்தி இருந்தார். அவரின் அமைச்சரவையில் நிதிஅமைச்சராகஇருந்த யஷ்வந்த்ராவ் பி சவான் 1973-74ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்தான் கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. மத்திய அரசு ரூ.550 கோடி பற்றாக்குறையுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தது, அந்த நேரத்தில் ரூ.550 கோடி என்பது மத்திய அரசுக்கு பெரியதொகை. இந்த பற்றாக்குறை பட்ஜெட் சூழல் நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார சூழலையும் வெளிப்படுத்தியது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதிஅமைச்சர் சவான் பேசுகையில் “ நாட்டின் சூழல் மிக மோசமாகியுள்ளது. கடுமையான வறட்சி, பஞ்சத்தால் உணவுப் பொருட்கள், தானியங்கள் உற்பத்தி, விளைச்சல் மோசமாகக் குறைந்துவிட்டது. இதனால்தான் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது” என விளக்கம் அளித்தார்.
பிரதமர் இந்திரா காந்தி அரசு அந்த பட்ஜெட்டில் ரூ.56 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதாவது நிலச்சரி சுரங்கள், காப்பீடு நிறுவனங்கள், இந்தியன் காப்பர் கார்ப்பரேஷன் ஆகியவற்றை நாட்டுடைமையாக்கி அறிவித்தது. நிலக்கரி சுரங்கங்களை தேசியமயமாக்கியதன் மூலம் நாட்டின் எரிசக்தி பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்றது.
இந்த கருப்பு பட்ஜெட்டுக்குப் பின், மத்திய அரசு பல்வேறு நிதி சிக்கன நடவடிக்கைகளை எடுத்தது. பொருளாதார கொள்கைகளை வகுத்து, உற்பத்தியைப் பெருக்க திட்டங்கள் தீட்டியது.
இதையும் படிங்க: செல்வப் பெருந்தகைக்கு செக் வைக்கும் திமுக தலைமை...டி.கே.சிவகுமார் மூலம் ராகுலுடன் பேச்சு...