×
 

வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த சீமானையும், தொண்டர்களையும் மடக்கி கைது செய்தது காவல்துறை...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் நாடெங்கும் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் வெளியானது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மாணவியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது, குற்றவாளி ஞான சேகரன் திமுகவை சேர்ந்தவர், அவர் யாரிடம் சார் என பேசினார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லாததாலும்,  பல்வேறு குழப்பங்கள் இருந்ததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்தது.

அதிமுக தனியாக சிபிஐ விசாரணை கேட்டு பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தது. 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டு, ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

யார் அந்த சார் என்கிற கேள்வியையும் உயர் நீதிமன்றம் எழுப்பியிருந்தது. மாணவியை அவமானப்படுத்தும் விதமாக எஃப்.ஐ.ஆர் இருப்பதாக நீதிமன்றம் கேள்வி எழுப்பி கண்டித்திருந்தது.

இந்த பிரச்சனையில் பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம் நடத்தினார். அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று தவெக சார்பில் விஜய்,புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர், மாலையில் விஜய் கடிதத்தை துண்டுச்சீட்டாக விநியோகித்த மகளிர் அணியினர், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். புஸ்ஸி ஆனந்தும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே போராட்டம் அறிவித்திருந்த சீமான் திட்டமிட்டபடி இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தார். அப்போது போலீஸார் தலையிட்டு போராட்டத்துக்கு அனுமதி இல்லை, மீறி நடத்தினால் கைது செய்வோம் என்று தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "கொடுமையிலும் கொடுமை, மாணவி பாதிக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறீங்க, அறவழியில் போராடுபவர்களை எதற்கு கைது செய்கிறீர்கள். நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறீங்க, நடவடிக்கை எடுங்கன்னு போராடுபவர்களையும் கைது செய்கிறீர்கள். எதற்கு போராடுகிறோம் என்று ஊடகங்களுக்கு சொல்வதற்கு கூட விடுவதில்லை. இது கொடுமையிலும் கொடுமை" என்று தெரிவித்தார்".

இதையும் படிங்க: 'யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது?' பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்

பின்னர் காரிலிருந்து இறங்கி அவர் மேடை நோக்கி நகர்ந்தபோது போலீசார் அரண்போல் குறுக்கே நின்றார்கள். அதை மீறி சென்ற சீமானை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் வள்ளுவர் கோட்டம் பகுதியே பரபரப்பாக காட்சி அளித்தது.

இதையும் படிங்க: எதிர் கட்சிகாரர்களே அந்த பெண்ணிற்கு எதிர்காலம் இருக்கு.. இதில் அரசியல் வேண்டாம்... கனிமொழி எம்பி சாட்டையடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share