வார விடுமுறை - 1,220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சேர்ந்தாற்போல் விடுமுறை அமைந்தால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதாவது தங்கள் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுப்பது வாடிக்கை.
சிறப்பு ரயில்கள், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதும் வழக்கம்.
அந்தவகையில் வருகிற வாரவிடுமுறையையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 365 பேருந்துகளும், பிப்ரவரி 1-ந் தேதி (சனிக்கிழமை) 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடுமுறை தினத்தையொட்டி சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்...
இதேபோன்று கிளாம்பாக்கத்திற்கு முன்னதாக சென்னையின் மையமாக திகழ்ந்த கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி வெள்ளிக் கிழமை 60 பேருந்துகளும், பிப்ரவரி 1-ந் தேதி சனிக்கிழமை 60 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து 31-ந் தேதி 20 பேருந்துகளும், பிப்ரவரி 1-ந் தேதி 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடனடியாக வெளிநாடு செல்ல வேண்டுமா.? தட்கல் பாஸ்போர்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!