தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையும், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க கடந்த வாரம் திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் அடங்கிய குழு தென் மாநிலங்களுக்குச் சென்று தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி வருகிறார்கள்.
இதையும் படிங்க: பிஜேபிக்கு தலைவலியை கொடுக்க திமுக எம்.பி.க்கள் தீர்மானம்..! பிற கட்சிகளுடன் கைகோர்க்க அதிரடி
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் தொகுதி மறுசீரமைப்புக் குறித்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “தொகுதி மறுசீரமைப்பால் 9 மாநிலங்களில் ஒன்று முதல் 9 தொகுதிகள்வரை இழக்க நேரிடும். ஆனால், பீகார், உத்தரப்பிரதேசம் 11 முதல் 10 தொகுதிகள் கூட கூடுதலாகக் கிடைக்கும்.
தென் மாநிலங்கள் கடந்த காலங்களில் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தின, குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைத்தன, இதுஅப்போது தேசிய நோக்கமாக, இலக்காக இருந்தது அதை செய்தனர். அதற்கு இப்போது அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

2019ம் ஆண்டு மார்சில் இரு வல்லுநர்களான மிலன் வைஷ்ணவ், ஜேமி ஹின்ட்ஸ்ன் ஆகியோர் 2001 முதல் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆய்வு செய்து தொகுதி மறுசீரமைப்புக் குறித்து அறிக்கை வெளியிட்டனர்.
அதன்படி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டால் தமிழகம் 8 தொகுதிகளையும், கேரளா 8 தொகுதிகளையும், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் தலா 8 தொகுதிகளையும் இழக்க நேரிடும். ஒடிசாவில் 3 தொகுதிகளையும், மேற்கு வங்கம் 4 தொகுதிகளையும் இழக்க நேரிடும். கர்நாடகம் 2 தொகுதிகளையும், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் தலாஒரு தொகுதியை இழக்கும், அசாம், ஜம்மு காஷ்மீர், மற்றும் மகாராஷ்டிராவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

ஆனால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும் கூடுதலாக்க கிடைக்கும். ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்தியப்பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், ஜார்க்கண்ட், ஹரியாணா, குஜராத், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு தொகுதியும் கூடுதலாகக் கிடைக்கும்.
இப்போதுள்ள தொகுதிகள் அனைத்தும் கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டவை. 2022, பிப்ரவரி முதல் திருத்தப்பட்ட பிரிவு 82 நடைமுறைக்கு வந்துள்ளதால், 2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்கும். 2021ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்னும் தொடங்காத நிலையில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் சரியான நேரம் கேள்விக்குறியாக உள்ளது
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘டீலிமிட்டேஷன்’ என்றால் என்ன..? திமுக ஏன் பதறுகிறது..? காரணம் என்ன.? கேள்விகளும் பதில்களும்..!