சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் (ஈசிஆர்) நேற்று இரவு காரில் குடும்பத்துடன் சென்ற பெண்களைத் திமுக கொடியுடன் கூடிய மற்றொரு காரில் வந்தவர்கள் துரத்தினர். மேலும் சாலையின் நடுவே வண்டியை நிறுத்தி அடாவடியில் ஈடுபட்டனர். வீடு செல்லும் வரை பெண்கள் இருந்த காரை அந்த ஆசாமிகள் துரத்திய வீடியோ வெளியாகி வைரலானது. இதுதொடர்பாக அப்பெண்கள் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நள்ளிரவில் ஈசிஆரில் பெண்களைத் துரத்திய சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”இரவில் பொதுவெளியில் பெண்களைத் துரத்தும் திமுக உடன்பிறப்புகள், யாருடைய தம்பிகள்? சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களைத் திமுக கொடியுடன் கூடிய மற்றொரு காரில் வந்த போதை ஆசாமிகள் வெறிகொண்டு துரத்துகின்றனர், பயந்த அந்த இளம் பெண்கள் அலறித் துடிக்கின்றனர், ஏதோ சினிமா காட்சி போல தோன்றும் இந்த காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் அரசு.. திமுக அரசு மீது அண்ணாமலை ஆவேச தாக்கு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எல்லாம் திமுவின் பெயர் அதிகம் அடிபடுகிறதே, திமுககாரன் என்பது குற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அடையாளமா என்ன? நாட்டில் உள்ள பாலியல் குற்றவாளிகளை எல்லாம் உறவுமுறை சொல்லிக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்காமல் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் அறிவார்ந்த அறிவாலய தலைவர்கள், இந்தப் பெண்களை என்ன குறை சொல்லிக் கொச்சைப்படுத்தப் போகிறார்கள் ஸ்டாலின் அவர்களே?” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சரா..? இது தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி... படபடக்கும் திருமாவளவன்..!