மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையின் அமலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி பள்ளிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும்புதிய தேசிய கொள்கையில் உள்ள அம்சங்களையும் ஏற்க வேண்டும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை, 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ், 5+3+2+2 எனப் பள்ளிகளில் கல்வி நிலை பின்பற்றப்படுகிறது.

இதனால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் சமக்ரா - எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இத்திட்டத்தில் நிதியைப் பெற பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாகவும், அதனால் சமக்ரா - எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் தமிழகத்துக்கு நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாகவும் தமிழக அரசு புகார் கூறி வந்தது.
இதையும் படிங்க: பாஜக வெற்றிக்கு பின் உள்ள தேர்தல் அறிக்கை...தமிழக அரசியல் கட்சிகள் கற்க வேண்டிய பாடம்
இந்நிலையில் சமக்ரா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக மிரட்டல் விடுத்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்துள்ளார்கள்.
தங்களது உரிமைகளுக்காக போராடும் தமிழக மாணவர்களை தண்டிக்கிறார்கள்.
இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும், ஒரு அரசுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான நிதியை இரக்கமின்றி முடக்கியதில்லை. தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்