திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டைப் புதுப்பிக்கும் பணி முடிவடையும் நிலையில், காமராஜர் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று மாற்ற திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த முயற்சிக்கு தமாகா, நாதக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் விவசாய பிரிவு பெயர் மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தது.

இந்நிலையில் திருத்தணியில் உள்ள மார்க்கெட் காமராஜர் பெயரிலேயே இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் நகராட்சி நிர்வாக இயக்குநர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காமராஜர் பெயரில் கை வைத்த திமுக.. கூட்டணி கட்சிக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த கதர்ச்சட்டைகள்..!
அதில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை எண்.(4D) 35. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 18.08.2023 வெளியிடப்பட்டது.

அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்கு "பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி" என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காமராஜருக்கு பதில் கருணாநிதி பெயரை சூட்டுவதா..? காமராஜருக்கு நிகராக ஒரு முதல்வர் உண்டா..? திமுக அரசை விளாசிய சீமான்!