ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம்....ஜெ.தீபாவுக்கு ஏமாற்றம்...தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலம் ஆகியவற்றை தமிழக காவல் அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது. ஜெ.தீபாவுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது நீதிமன்றம்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலம் ஆகியவற்றை கர்நாடக கருவூலத்தில் இருந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம் வெள்ளி வைரம் நகைகளையும் 1562 ஏக்கர் நில பத்திரங்களையும் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச். வி.மோகன் கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு ஆறு பெட்டிகளுடன் வர வேண்டும் என்றும் அதற்கான உரிய வாகன வசதி பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து நீதிமன்றத்திற்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று எடுத்து செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையும் படிங்க: தொடரும் இலாகா பறிப்பு... திமுக ஆட்சியில் அதிக முறை பந்தாடப்பட்ட ராஜகண்ணப்பன்...!
பாதுகாப்புக்கு காவல்துறை உடன் வரவேண்டும் என்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருட்களை எடுத்துச் செல்லும் போது அவற்றை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் வரவேண்டும் என்றும் ஒட்டுமொத்த நடைமுறையையும் படம்பிடிக்க ஒளிப்பதிவாளர்கள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு இன்று காலை தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி. விமலா, கூடுதல் எஸ்.பி. புகழ்வேந்தன், இரு உதவி போலீஸ் கமிஷனர்கள், இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முப்பது போலீசார் மற்றும் ஆபரண மதிப்பீட்டாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் வந்தனர்.
நீதிமன்றத்தில் ஜெ. தீபா சார்பில் ஆஜரான வக்கீல், ஆபரணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அம்மனு சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆகவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்காமல், உச்ச நீதிமன்றம் தடைவிதித்தால் பார்க்கலாம், அதுவரை ஆபரணங்கள் ஒப்படைக்கும் பணி தொடரட்டும் என்று உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆபரணங்கள் சரி பார்த்து வழங்கும் பணி தொடங்கியது. ஒப்படைக்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கிடையில், ஜெயலலிதா நகை தொடர்பான விவகாரத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை ஏற்க மறுத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆகியவை மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் பறிமுதல் செய்த சொத்துகள் தமிழ்நாடு அரசுக்கு தான் சொந்தம் என்பதையும் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்யகுமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ‘ஜெயலலிதா நகைகள் தொடர்பான விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆகியவை தவறான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் மறைந்த தனது அத்தையான ஜெயலலிதாவின் நகைகளை தான், அவரது அண்ணன் மகளான தீபா கேட்கிறார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. எப்படி அரசிடம் நகைகளை ஒப்படைக்க முடியும். எனவே இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் நகைகளை தீபாவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ. தீபா தரப்பின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாக தெரிவித்து, ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடையில்லை என்று உறுதியாகியுள்ளது. ஜெ.தீபா தரப்புக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவமா..? போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்..!