மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நேர்ந்த துயரம்.. இரு குழந்தை உட்பட மூவர் பலி..
நாமக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ஆண்டாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அப்பகுதியில் நிலம் குத்தகைக்கு எடுத்து பருத்தி விவசாயம் செய்து வருகிறார். வழக்கம்போல் இன்று செல்வம் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, தனது மனைவி இளஞ்சியம் மற்றும் 5 மற்றும் 2 வயதுடைய இரண்டு பேர குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
இவரது விவசாய நிலத்துக்கு அருகே சுப்பிரமணி என்பவரது விவசாய நிலம் உள்ளது. சுப்பிரமணி அவரது நிலத்தில் மின்கம்பத்தில் இணைத்தவாறு கம்பி வேலி ஒன்றையும் அமைத்துள்ளார். செல்வம் தமது மனைவி மற்றும் பேர குழந்தைகளுடன் சுப்பிரமணி நிலத்தை ஒட்டியவாறு உள்ள வரப்பில் சென்றுள்ளார். பின்னால் வந்து கொண்டிருந்த செல்வத்தின் மனைவி இளஞ்சியம் தமது ஒரு பேரக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி இன்னொரு பேரனை கையில் பிடித்தபடி நடந்து சென்றார்.
இதையும் படிங்க: அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனம் குளிரும் பினராயி விஜயன்!
அப்போது ஒரு இடத்தில் வரப்பு குறுகலாக இருந்ததால் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க கம்பி வேலியில் கை வைத்துபடி இளஞ்சியம் நடந்துள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், இளஞ்சியம் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். தம் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் செல்வம் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் மூலம் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மூவரின் உடலும் உடற் கூராய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக மின் வாரியத்தினரின் அலட்சியத்தால் மின் கசிவு காரணமாக மூவரும் உயிரிழக்க நேரிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: எஸ்டிபிஐ-க்கு தொடர்பு.. 29 கணக்குகளில் ISIS அனுப்பிய ரூ.62 கோடி : முடக்கிய ED..!