×
 

நாடோடி பட பாணியில் பெண் கடத்தல்.. ஒன் சைடு காதலால் வினை.. கடத்தல் நண்பர்கள் கூண்டோடு கைது..!

சமயபுரம் அருகே ஒருதலையாக காதலித்த பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்ற ஒருதலைக் காதலன் உட்பட 4 பேரை போலீசா கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் பகுதியை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் ஜெகன். வயது 25. பி.காம் பட்டதாரியான ஜெகன், அதே பகுதியை சேர்ந்த துளசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். துளசி செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்னாலே சென்று காதல் வலையை வீசி விரித்துள்ளார்.

ஆனால் துளசி இவரை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. பொறுமை இழந்த ஜெகன், சில மாதங்களுக்கு முன்பு துளசியை வழிமறித்து தனது காதலை மனம் திறந்து சொல்லி உள்ளார். ஆனால் துளசி, ஜெகனின் காதலை ஏற்க மறுத்ததுள்ளார். அதோடு நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடமும் தெரிவித்து உள்ளார்.

இதனை அறிந்த ஜெகன், துளசியின் பெற்றோரிடம் நான் உங்கள் பெண்ணை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்து கொடுங்கள் என வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். எங்கள் பெண்ணிற்கு இதில் உடன்பாடில்லை. ஆகையால் இதனை கைவிடுங்கள் என துளசியின் பெற்றோர், ஜெகனுக்க்கு அறிவுரை செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் தான் ஒருதலைப் பட்சமாக காதலித்த இளம் பெண்ணை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை.. 57 சவரன் நகைகள் மாயம்.. கொள்ளையர்களுக்கு போலீசார் வலை..!

இதுகுறித்து தனது நண்பர்கள் இடத்தில் ஜெகன் ஐடியா கேட்டதாக கூறப்படுகிறது. துளசியை கடத்தி திருமணம் செய்து விட்டால், யாராலும் பிரிக்க முடியாது. திருமணம் ஆன பின்பு துளசியின் மனம் மாறிவிடும் என ஜெகன் தப்புக்கணக்கு போட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு தனது நண்பர் ஒருவரின் பொலிரோ காரை இரவல் வாங்கிய ஜெகன், அதில் மூன்று நண்பரை அழைத்துக்கொண்டு துளசியை கடத்தி கட்டாய திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார்.

அதன்படி தனது நண்பர்களான ரீகன் ராஜ்,  சிவக்குமார், ரெஸ்லின் ஆகியோருடன் பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜெகன், அவரை வெளியே வரும்படி அழைத்துள்ளார். அப்போது வெளியே வந்த அந்த துளசியை, ஜெகன் குண்டுகட்டாக தூக்கி காரில் வைத்து கடத்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது துளசியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த பெற்றோர் மகளை மீட்க முயன்றனர். இருப்பினும் ஜெகன் உள்ளிட்ட 4 பேர் பெண்ணை காரில் கடத்திச் சென்றுவிட்டனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் உதவி எண்ணிற்கு துளசியின் பெற்றோர் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் அல்லாது அருகில் இருக்கும் பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசாருக்கு திருச்சி மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்து தேடுதல் பணியை தீவிர படுத்தினர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இளம் பெண்ணை கடத்தி வந்த காரை மடக்கி பிடித்து ஜெகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து துளசியை பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து ஜெகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த சமயபுரம் போலீசார் துளசியை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் ஜெகன், ரீகன் ராஜ்,  சிவக்குமார், ரெஸ்லின் நான்கு பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் வெடித்த எம்புரான் பட சர்ச்சை.. முதல்வர் சொன்ன விஷயம் இதுதான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share