×
 

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. குழந்தையை தூக்கி கொஞ்சி குழந்தையாக மாறிய மோடி..!

இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டை முடித்துக்கொண்டு மூன்று நாள் பயணமாக நேற்று இரவு இலங்கை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர், மோடி மோடி என்று உச்சஸ்தாயியில் முழக்கமிட்டு வரவேற்றக் காட்சி நெகிழச் செய்தது.

இலங்கையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் பின்னர் அதிபராக பொறுப்பேற்ற அனுரகுமார திசநாயகே கடந்த டிசம்பரில் முதன்முறையாக  இந்தியாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் திசநாயகேவும் சேர்ந்து கூட்டாக அறிக்கையும் வெளியிட்டனர். அப்போதே பிரதமர் மோடியை இலங்கை வரும்படி திசநாயகே கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பின் பேரில் மூன்று நாள் பயணமாக மோடி நேற்று இரவு இலங்கை சென்றடைந்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மிக உயரிய ‘மித்ரா விபூஷனா’ விருது: இலங்கை அரசு கெளரவம்..!

சிறப்பு விமானம் மூலம் பாங்காங்கில் இருந்து கொழும்பு சென்றடைந்த பிரதமர் மோடியை இலங்கை அரசின் உயர்அதிகாரிகள் கூடிநின்று வரவேற்றனர். விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரும், இலங்கைவாழ் இஸ்லாமியர்களும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடி, மோடி என்று அவர்கள் எழுப்பிய குரல் இந்துமகா கடலுக்கு இணையாக எதிரொலித்தது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மோடியுடன் கை குலுக்கவும், பேசவும் ஆர்வம் காட்டி முண்டியடித்தனர். மோடியும், பாதுகாப்பு கெடுபிடிகளை தாண்டி அவர்களிடம் நேரடியாக சென்று ஒவ்வொருவரையும் தொட்டு கை குலுக்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது குழந்தை ஒன்றை தூக்கி தனது தோளில் வைத்துக் கொண்ட காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோன்று ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டு வந்து மோடியிடம் தங்கள் மரியாதையை தெரிவித்தனர்.  

இதனைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மலாட்டத்தை மோடி ரசித்து பார்த்தார். குறிப்பாக அசோக வனத்தில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்த காட்சியை பொம்மலாட்டமாக அவர்கள் நிகழ்த்தி காண்பித்தனர். 

இதுபற்றி தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்த மோடி, கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய  ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி! என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 10 எஸ்.பி., 15 டிஐஜி... ஹை அலர்ட்டில் ராமேஸ்வரம்... பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share