×
 

ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் சாலை அமைக்க மாட்டோம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்..!

ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏற்கனவே காங்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படவும் வாய்ப்பாக அமைந்து விடும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து அதிகரித்து, உணவு தேடிச் செல்லும் விலங்குகள் உயிருக்கு ஆபத்தாகி விடும் எனவும், புதிய சாலையால் நீர் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எம்.பி. தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி..!

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது, புதிதாக அமைக்க உள்ள சாலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குறிப்பிடத்தக்க அச்சத்தை ஏற்படுத்தும் என வனத்துறை அதிகாரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதுசம்பந்தமாக விளக்கமளிக்க அவகாசம் வழங்க அரசுத்தரப்பில் அவகாசம் கேட்ட போது, குறிப்பிட்ட அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சாலைப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்துவதாக அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 27 ம் தேதிக்கு தல்லிவைத்தனர்.

முதுமலை, ஆனைமலை போன்ற வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கும் இடத்தில் ஏற்கனவே சுற்றுலா என்ற பெயரில் பொதுமக்களின் இடையூறு அதிகரித்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் உல்லாச விடுதிகள், தனியார் சுற்றுலா மையங்கள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இதனால் பாதிப்பு என்னவோ வனவிலங்குகளுக்குத் தான்.

மேலும் குடிநீர் தேடியும், உணவுப் பற்றாக்குறை காரணமாகவும் வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைவது போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. இத்தகைய சாலைகள் அமைக்கும்பட்சத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் அதிக அளவில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளே ஏற்படும். வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தும் அரசு, இதுபோன்ற பல்லுயிர் பாதுகாப்பு அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
 

இதையும் படிங்க: நிலவுக்கே சென்றாலும் ஒருசிலர் சாதியை தூக்கிப் பிடிப்பார்கள்.. உயர்நீதிமன்றம் வேதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share