தவெகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிசாமியின் சூசக பதிலால் அதிர்ந்த மேடை
வரும் 2026 தேர்தலில் எப்படியாவது கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துங்கள் என கேட்கும் அனைவருடைய நம்பிக்கையை உறுதிபடுத்தும் விதமாக பலமான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அதிமுக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அமைதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியுள்ளார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு வருமாறு..
”அதிமுக தேர்தல் வரும்போது கூட்டணி வைப்போம். கூட்டணி வேறு கொள்கை வேறு. திமுக அப்படி அல்ல அதிகாரத்திற்கு வருவதற்கு கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சி திமுக. கூட்டணி எதற்காக வைக்கிறோம் ஓட்டுக்கள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி வைக்கிறோம். கூட்டணி வைப்பது ஓட்டுகள் சிதறாமல் இருக்க, அப்படி சிதறாமல் ஓட்டுகளை வாங்கும் பொழுது வெற்றி கிடைக்கும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். ஏன் என்று சொன்னால் இங்கே மேடையில் அமர்ந்திருக்கின்ற நிர்வாகிகள், இங்கு வந்துள்ள சகோதர சகோதரிகள், வெளியில் இருக்கின்ற பொதுமக்கள் என எங்கே சென்றாலும் எப்படியாவது கூட்டணி அமையுங்கள் என்று சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: தவெகவில் 40 பேர்தான் ரெடி… அதிமுக கூட்டணிதான் சரி... பி.கே எண்ட்ரி… விஜய்க்கு முட்டுக்கட்டை..!
எதற்காக? நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக. உங்கள் அனைவருடைய கோரிக்கையையும் ஏற்று, 2026 ஆம் ஆண்டு அதிமுக தலைமையில் வலிமையான வெற்றி கூட்டணி அமையும், அமையும், அமையும். திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றார்கள். மத்திய ஆட்சியிலே அப்பொழுது அமைச்சராக இருந்த முரசொலி மாறன் நோய் வாய் பட்டு ஓராண்டு காலம் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவரை இலாக இல்லாத அமைச்சராக பாஜக அரசு வைத்திருந்தது. ஐந்தாண்டு காலம் முடிந்தது அப்படியே அந்தர்பல்டி அடித்தனர்.
கொள்கை கிடையாது, கோட்பாடு கிடையாது 2004 இல் காங்கிரஸ் உடன் கூட்டணி. இவர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு அருகதையே இல்லை. ஸ்டாலின் அவர்களே. சந்தர்ப்பவாத கட்சி திமுக. பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து தான் நிறம் மாறும், நீங்கள் அடிக்கடி நிறம் மாறும் கட்சி திமுக. பதவிக்கும், அதிகாரத்திற்கும் வருவதற்கு எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் அப்படி விட்டுக் கொடுத்து தான் 1999 ல் ஒரு கட்சியுடன் மத்தியிலே ஆட்சிக்கு வருவதற்கு, அதிகாரத்திற்கு வருவதற்கு கூட்டணி அமைத்தவர்கள், 2004 மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த கட்சி தான் திமுக. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக தலைமையில் தவெக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய பலமான அனைத்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற கருத்து பரவலாக வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், திடீரென மௌனம் கலைத்து அனைவருடைய கருத்துகளையும் ஏற்று அதிமுக தலைமையில் பலமான அணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அறிவாலயத்தின் துகளைக்கூட அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி.!