ஷாக் மேல ஷாக்..! அதிமுகவில் இருந்து விலகிய முக்கியப்புள்ளி..!
எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனை, திண்ணைப் பிரச்சாரம், முக்கிய நிர்வாகிகள் உடனான ஆலோசனை என தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரே இடத்திற்கு செல்லும் போது கூட இருவரும் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பது, சட்டசபையில் செங்கோட்டையன் தனியாக இருப்பது உள்ளிட்ட நிகழ்வுகளும் அரங்கேறின. அதிமுக கட்சிக்கு உள்ளேயே பல சலசலப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பாஜக உடனான கூட்டணி தொடர்பான பேச்சுக்களும் எழுந்துள்ளன. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததோடு அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்தாகவும் தகவல் வெளியாகியது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியாக இது இருக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்தது.
இதையும் படிங்க: அதிமுக- பாஜக கூட்டணி… அமித்ஷா கொடுத்த உத்தரவும்… உத்தரவாதமும்… இ.பி.எஸுக்கு கிடுக்குப்பிடி..!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்ததாகவும் கடந்த 20 ஆண்டுகாலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையோடு உழைத்து வந்ததாகவும், அதிமுகவின் கட்சிப் பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பின்றி பணியாற்றியதாகவும் சந்திரசேகர் தெரிவித்தார். தற்போது தனது தனிப்பட்ட பணிகள் காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருப்பதால் கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விடுவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தனக்கு அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி உள்ளார். எஸ்.பி வேலுமணியின் வலது கரமாக இருந்த சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு.. திகைத்து போய் சைலண்ட் மோடில் அதிமுக.. விளாசும் திமுக கூட்டணி கட்சி!