×
 

மக்களை நல்லா ஏமாத்துறாங்க..! மாநில சுயாட்சியை கிழித்தெடுத்த ஜெயக்குமார்..!

மக்கள் வாழ முடியாத சூழலில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடி உள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, மாவீரராக வாழ்ந்து, மாவீரராகவே மறைந்த, தீரன் சின்னமலையின் புகழை நிலைநாட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் சிலை நிறுவப்பட்டதாகவும், இன்று தீரன் சின்னமலையின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது திருவுருவப் படத்திற்கும் சிலைக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளதாகவும், நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை, மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும் கூறினார்.

குறிப்பாக மாநில சுயாட்சி குறித்து பேசிய ஜெயக்குமார், மத்தியில் ஆளும் அரசோடு கூட்டணி வைத்திருந்த போதே பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம் என்றும், நிதி தன்னாட்சியை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வந்திருக்கலாம், முல்லைப் பெரியாறு கச்சத்தீவு, காவிரி பிரச்சனை என பல விவகாரங்களுக்கு தீர்வு கண்டிருக்கலாம் என்றும் கூறினார். அப்போதெல்லாம் விட்டுவிட்டு கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதை போல தற்போது மாநில சுயாட்சி குறித்து பேசுவதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: நான் அதிமுகவில் இருந்து விலகுகிறேனா..? திருமாவுக்கு சாட்டையடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

மக்களை ஏமாற்றுகின்ற, இவர்தான் பாதுகாவலன் என்ற பிம்பத்தை ஏற்படுத்தக்கூடிய, எள்ளி நகையாட கூடிய தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார். மக்கள் வாழ கூட முடியாத சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கு இருப்பதாகவும், கொலை, கொள்ளை செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மீண்டும் தாக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கெஜ்ரிவால் போல ஸ்டாலினும் ஜாமினில் வந்து பிரசாரம் செய்வார்.. கே.பி.ராமலிங்கம் கணிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share