×
 

பயணிகள் பாதுகாப்பில் இவ்ளோ அலட்சியமா? வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து காயம்..!

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்த மூதாட்டி ஒருவருக்கு உரிய நேரத்தில் வீல் சேர் வழங்கப்படாததால் அவர் நடந்து செல்லும் போது கீழே விழுந்து காயம்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகா ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. எனினும் பயணிகள் சேவை என்று வரும்பொழுது அவ்வப்போது ஏர் இந்தியா நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 82 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் வீல் சேர் கொடுக்க தாமதித்ததால் அந்த மூதாட்டி நடந்து செல்ல முயற்சித்த போது கீழே விழுந்துள்ளார். இதில் அந்த மூதாட்டிக்கு மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. மூதாட்டிக்கு நேர்ந்த இந்த சம்பவத்தால் மற்ற பயணிகள் ஏர் இந்தியாவை இணையத்தில் வறுத்தெடுக்க துவங்கி உள்ளனர்.

மறைந்த லெப்டினென்ட் ஜெனெரல் ஒருவரின் மனைவி ராஜ் பாஸ்ரிச்சா. ( வயது 82 ). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் 5ம் தேதி  தனது பேத்தியான பருல் கன்வர் என்பவருடன் சேர்ந்து டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தார். பாட்டி ராஜ் பாஸ்ரிச்சா வயது மூப்பின் காரணமாக அதிக தூரம் நடக்க முடியாது. எனவே பேத்தி பருல் கன்வர், பாட்டியை விமானக் கதவு வரை அழைத்துச்செல்ல ஏற்கனவே வீல் சேர் கோரியிருந்தனர். அது அவர்கள் வாங்கிய விமான டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் விமானம் ஏறுவதற்காக டெர்மினல்-3 ஐ அடைந்தபோது, அங்கு வீல் சேர் இல்லை. 

இதையும் படிங்க: விமான சேவை நிறுத்தம்.. 2 வழித்தடங்களுக்கு தடை.. ஏர் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பு

ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உதவி மையத்திடம் பேத்தி பருல் கன்வர் முறையிட்டுள்ளார். ஒரு மணி நேரம் காத்திருந்தும் யாரும் எந்த உதவியும் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், யாரும் தங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்றும் பேத்தி பருல் கன்வர் குற்றம்சாட்டினார். விமானத்திற்கு தாமதம் ஆனது. எனவே இனியும் வீல் சேருக்காக காத்திருக்காமல், மூதாட்டி ராஜ் பாரிச்சா, தனது பேத்தி பரில் கன்வரின் உதவியுடன் மெதுவாக நடக்கத் தொடங்கினார். ஆனால் நீண்ட தூரம் நடந்ததால் மூதாட்டியின் கால்கள் தளர்ந்தது. ஒரு அளவுக்கு மேல் நடக்க முடியாமல், ஏர் இந்தியா பிரீமியம் எகானமி கவுண்டருக்கு முன்னால் அவர் சரிந்து விழுந்தார். 

பாட்டி விழுந்த வேகத்தில் அவரது தலை, மூக்கு மற்றும் உதடுகளில் அடிபட்டு இரத்தம் வழியத் தொடங்கியது. பயணி ஒருவருக்கு ரத்தம் வந்த போதிலும் விமான ஊழியர்களில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கும் மேல் பாட்டியால் நடக்க முடியாது என்று ஆன பின் தாமதாக வீல் சேரை ஊழியர்கள் வழங்கியுள்ளனர். ஆனால் காயம்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்ற பாட்டிக்கு எந்த மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவில்லை. அவருக்கு பலத்த காயங்கள் இருந்தபோதிலும் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. விமானப் பயணத்தின் போது, விமானக் ஊழியர்கள் ஐஸ் கட்டியைக் கொடுத்து பாட்டிக்கு முதலுதவி அளித்துள்ளனர். 

விமானம் தரையிறங்கியதும் பெங்களூரு ஏர்போர்டில் ஒரு மருத்துவர் அழைக்கப்பட்டார். அதன் பின் பாட்டியின் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. ஆனாலும்  அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் பேத்தி பருல் கன்வர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் மூதாட்டியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து ஏர் இந்தியா பதில் அளித்துள்ளது. அந்த பதிவில் இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம். விரைவில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீரென வெடித்து சிதறல்.. சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் காயம்.. மூட்டையில் பதுக்கி இருந்த மர்ம பொருள்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share